Published : 01 Aug 2019 12:22 PM
Last Updated : 01 Aug 2019 12:22 PM

வடிவேலுவுக்கு குட்பை; வேறு நாயகனை தேடுகிறது 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படக்குழு: நடந்தது என்ன?

வடிவேலுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால், அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறொரு நாயகனுடன் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரிடம் கொடுத்தது. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் அவரால் இதர படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதன்  தொடர்ச்சியாக வடிவேலுவுடன் படக்குழு பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், வடிவேலு பல்வேறு காரணங்கள் கூறி படத்தில் நடிப்பதை தவிர்த்துக் கொண்டே வந்தார்.

நேசமணியால் வந்த சர்ச்சை

வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் இணையத்தில் ட்ரெண்ட்டாக ஆரம்பித்தது. அந்த தருணத்தில் வடிவேலுவின் புகழ் மீண்டும் உச்சிக்குச் சென்றது. இந்த தருணத்தில் வடிவேலு அளித்த பேட்டியில், ஷங்கர் மற்றும் சிம்புதேவன் இருவரையும் கடுமையாக சாடினார்.

இது பலரையும் முகம் சுழிக்க வைத்தது. இந்தப் பேச்சுக்கு பல்வேறு இயக்குநர்கள் வடிவேலுவை கடுமையாக சாடினார்கள். இந்தத் தருணத்தில் இயக்குநர் சீமானும் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை தொடங்கினார். இருதரப்புக்கும் உள்ள பிரச்சினையைப் பேசித் தீர்க்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனிக்கவில்லை. 

வடிவேலு நீக்கம்

வடிவேலுவின் பேச்சுக்கு இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்ததே தவறு என்று கருதி, இறுதிகட்டப் பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. அப்போது வடிவேலு தான் மீண்டும் நடிக்கிறேன். ஆனால், அதற்கு சம்பளம் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று ஒரு தொகையைக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட படக்குழுவினரோ, அப்படி ஒன்றும் தேவையில்லை என்று கருதியுள்ளது.

அப்போது, லைகா நிறுவனம் 'நாங்கள் கொடுத்த பணத்தை வடிவேலுவிடமிருந்து வசூலித்துக் கொள்கிறோம். வேறு படங்களில் நடிக்க வைத்து கழிக்கிறோம் அல்லது வழக்குப் போட்டுக் கொள்கிறோம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று கூறிவிட்டது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரோ சிம்புதேவனிடம் "வேறொரு நாயகனோடு 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடங்கலாம்" என்று கூறிவிட்டார். 'கசடதபற' இறுதிகட்டப் பணிகளுக்கு இடையே, வேறு யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளார் சிம்புதேவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x