Published : 31 Jul 2019 10:08 AM
Last Updated : 31 Jul 2019 10:08 AM

நாடக உலா: சங்கீத பிதாமகர் ஸ்ரீபுரந்தரதாசா

யுகன்

விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயருக்கே வட்டிக்கு நிதி தந்து உதவிய நவகோடி நாராயணா, ‘‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’’ என்று, எல்லா செல்வங்களையும் உதறிவிட்டு புரந்தரதாசராக மாறிய வரலாற்றை சொல்வதுதான் ‘சங்கீத பிதாமகர் ஸ்ரீபுரந்தரதாசா’ நாடகம்.

புரந்தரதாசர் எனும் மாமனிதரின் அருள் செறிந்த வாழ்க்கைக் கடலை ஒரு சிமிழியில் அடைக்கும் சவாலான காரியத்தை மிக நேர்த்தி யாக செய்துள்ளனர். ஆலிலையன் (டாக்டர் கிரிதர்), எம்.துர்கா (ராஜஸ்ரீ பட்) ஆகியோரது எழுத்திலும், இயக்கத்திலும் மிக நேர்த்தியான பதிவாக சென்னை ஆர்.ஆர்.சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் கடந்த வாரம் அரங்கேறியது ‘sரிபுரந்தரதாசா’ நாடகம்.

கிரிதர், ராஜஸ்ரீ பட் ஆகிய இருவரும் எழுத்து, இயக்கத்தோடு, நடிப்பிலும் ஜொலித்தனர். மிடுக்காக, கருமித்தனத்தோடு நவகோடி நாராய ணனாகவும், எளிமையின் திருவுருவாக புரந்தர தாசராகவும் நடிப்பில் இரு பரிமாணங்களை அற்புதமாக வெளிப்படுத்தினார் கிரிதர்.

காட்சிகளின் சித்தரிப்புகள் வெகு நுணுக்க மாக இருந்தன. கடன் பாக்கிக்காக, உஞ்ச விருத்தி செய்யும் ஏழையின் தம்புராவையும், சிப்ளா கட்டையையும் நவகோடி நாராயணன் பறித்துச் செல்வார். அவரைப் பார்த்து, ‘‘இவை உன்னை விட்டு எப்போதும் நீங்கப்போவது இல்லை’’ என்பார் அந்த ஏழை. நாரதரின் அம்ச மாகக் கருதப்படும் புரந்தரதாசரிடம் தம்புராவும், சிப்ளா கட்டையும் இறுதிவரை இருப்பதற்கான குறியீடாக இந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், நவகோடி நாராயணனின் மகள் பற்றி வசனத்தில் குறிப்பிட்டுவிட்டு, அதன் பிறகு அவரை மறந்துவிட்டது நகைமுரண். முன்பாதி நாடகக் காட்சிகளில் நகைச்சுவை யும், வசனங்களும் போட்டி போடுகின்றன. பின்பாதி காட்சிகளில் நெகிழ்ச்சியும், பாத்திரங் களின் நடிப்பும் போட்டி போடுகின்றன.

மனைவி இறப்புக்குப் பிறகு ஷேத்ராடனம் செல்கிறார் புரந்தரதாசர். சம்பந்தப்பட்ட ஸ்தலங் களின் காணொளியோடு புரந்தரதாசரையும் இணைத்து காட்சிப்படுத்தியது, நாடக மேடையி லேயே திரைப்படம் பார்த்த அனுபவம். புரந்தரதாசரின் பக்தியை அனைவருக்கும் உணர்த்த, தாசியின் வீட்டில் பண்டரிநாதன் செய்யும் லீலையும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, பக்தர்களாகவே ஆக்கின.

`ஜகதோதாரண’ போன்ற புரந்தரதாசரின் கீர்த்தனங்களும் இனிமையான இசையோடு பாடப்பட்டன. காட்சிக்கேற்ற இசையும் (எஸ்.குகபிரசாத்), கண்களை உறுத்தாத ஒளியும் (மனோ லைட்ஸ்) இரண்டு மணி நேர நாடகத் தின் காட்சி அனுபவத்துக்கு உதவின. இப்படியொரு வரலாற்றுப் பதிவை அனைவரும் ரசிக்கும் விதத்தில் நாடகமாக்கிய ஸ்ரீஅன்னை கிரியேஷன்ஸ் பரத்வாஜ் ஸ்ரீநிவாஸன் பாராட்டுக்கு உரியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x