Published : 22 Jul 2019 12:41 PM
Last Updated : 22 Jul 2019 12:41 PM

சூர்யாவின் கருத்து குறித்த சர்ச்சை: நழுவிய ஷங்கர்; கடுமையாகச் சாடிய சீமான்

சூர்யாவின் கருத்து குறித்த சர்ச்சை குறித்து ஷங்கர் அளித்த பதிலுக்கு, கடுமையாகச் சாடியுள்ளார் இயக்குநர் சீமான். 

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஜூலை 22) நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று (ஜூலை 22) மாலையே அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

தலைவர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு ஆகியோருக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி ஆர்.வி.உதயகுமார் மற்றும் பேரரசு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நேற்றைய தேர்தலில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் வாக்களித்தனர். பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியும் அளித்தனர்.

இயக்குநர் ஷங்கர் வாக்களித்துவிட்டுப் பேட்டியளிக்கும் போது 'புதிய கல்விக் கொள்கைக்கு சூர்யா எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து உங்கள் கருத்து' என்ன என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு ஷங்கர், “எனக்குத் தெரியாது. அதை நான் பார்க்கவில்லை” என்று பதிலளித்தார். ஷங்கரின் இந்தப் பதில் பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

ஷங்கர் சென்ற பிறகு இயக்குநர் சீமான் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது இயக்குநர் சங்கத் தேர்தல், பாரதிராஜா போட்டியிடாதது குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். உடனே சூர்யா குறித்த கேள்விக்கு ஷங்கர் அளித்த பதில் தொடர்பாக சீமானிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சீமான், "அவருடைய சமூகப் பொறுப்பு அவ்வளவு தான். பாரதிராஜா மீதிருக்கும் பாசம் அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்காக மட்டுமல்ல. அவருக்கு 78 வயதாகிறது. இன்றைக்கும் ஒரு சமூகப் பிரச்சினை என்றால் ஓடி வந்து போராட்டக் களத்தில் நிற்பது, போராடுவதால் மட்டுமே அவர் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

கஜா புயலில் தஞ்சாவூரின் பாதிப் பகுதிகள் அழிந்துவிட்டன. அவர்கள் படம் பார்க்க கொடுத்த பணத்தில் தான் உயர்நிலை இயக்குநர்கள் 30 கோடி, 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள். அவர்களுக்கு ஏன் ஒரு சிறுதொகை கூட கொடுக்கவில்லை. இவர்களது சமூகப் பொறுப்பு எல்லாம் அவ்வளவு தான். இங்கு 'மது குடிப்பது உடல்நிலைக்கு கேடு. புகைப் பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்' என்று போட்டுவிட்டால் சமூகப் பொறுப்பு முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள். 

காலத்தைப் பதிவு செய்பவன் தான் படைப்பாளி. சமகாலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பது எப்படி எனத் தெரியவில்லை. படங்களில் மட்டும் சமூகக் கருத்துகள், புரட்சிகரமான கருத்துகள் சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை" என்று கடுமையாகச் சாடினார் சீமான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x