Published : 17 Mar 2015 05:53 PM
Last Updated : 17 Mar 2015 05:53 PM

நெடுஞ்சாலை சுங்கக் கட்டணக் கொள்ளையை ஒழித்திடுக: திருமாவளவன்

தமிழக நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணக் கொள்ளையை ஒழித்திட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நெடுஞ்சாலைகளில் 100 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். அதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மாநிலங்களவையில் கூறியிருக்கிறார். ஏற்கனவே 62 சுங்கக் கட்டண சாவடிகளில் வசூல் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கான சாலை மத்திய மற்றும் மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத் துறைகளால் பராமரிக்கப்படுகின்றன. அதில் சுங்கக் கட்டண வசூலுக்கென 41 மையங்கள் அமைக்கப்பட்டு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தமது விருப்பம்போல அவ்வப்போது சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள். இந்தக் கொள்ளையின் காரணமாக பேருந்துக் கட்டணங்கள் உயர்வது மட்டுமின்றி சரக்குக் கட்டணம் உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது.

எந்தவொரு வாகனத்தைப் பதிவுசெய்வதென்றாலும் வாகனத்தின் விலையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு சாலை வரியாக மொத்தமாக வசூலிக்கப்படுகிறது. அதே வாகனத்துக்கு மீண்டும் சாலையில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானதாகும்.

அரசு தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போடப்படும் சாலைகளின் செலவுக்காகத்தான் கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் செலவை ஈடுகட்ட எத்தனை ஆண்டுகளுக்குக் கட்டணம் வசூல் செய்வார்கள் என்பதை அரசாங்கம் சொல்வது இல்லை. இது முழுக்க முழுக்க தனியாரின் கொள்ளைக்கு வழிவகுப்பதாகவே உள்ளது.

தமிழக நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சுங்கக் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக தமிழக அரசு முடிவுகட்டவேண்டும்'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x