Published : 12 Feb 2015 09:15 am

Updated : 12 Feb 2015 09:15 am

 

Published : 12 Feb 2015 09:15 AM
Last Updated : 12 Feb 2015 09:15 AM

நல் மறுவரவு அர்விந்த்!

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தியிராத, தனிச்சிறப்பான, கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரும் வெற்றியை டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 பேரவைத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி அபார சாதனை புரிந்திருக்கிறது. அரசியலில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சாமானியர்களின் பெருவிருப்பம் பிரதிபலித்திருக்கிறது. மிகப் பெரிய அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டும் பெருக்கித் தூர வீசப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் என்பது எளிதில் அணுகும் வகையிலும், தங்களுடைய பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு செயல்படும் விதத்திலும், வெளிப்படையாகச் செயல்படும் தன்மையிலும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையே இந்தத் தேர்தல் முடிவு அழுத்தமாக வலியுறுத்துகிறது.

தகவல் அறியும் உரிமைக்காகவும் ஊழலை எதிர்த்தும் அர்விந்த் கேஜ்ரிவால் நிகழ்த்திய போராட்டங்களைக் கேலிச்சித்திரங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பகடி செய்தனர். ஆனால், அந்தப் போராட்டங்கள்தான் அவரை முழுநேர அரசியல்வாதியாக உருவாக்கின. மக்களவைப் பொதுத் தேர்தலின்போது டெல்லியில் ஒரு தொகுதியிலும் ஆஆக வெற்றி பெறவில்லை. அப்படியிருந்தும் அர்விந்த் கேஜ்ரிவால் மனம் தளராமல் தொடர்ந்து மக்களைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவந்தார். மக்களிடமிருந்த அதிருப்தியை அறிந்து, அவர்களை வழக்கமான அரசியல் பாணியில் ஒன்று திரட்டினார்; அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்; தூய்மையான, மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசைத் தருவேன் என்று உறுதியளித்தார். மக்கள் அவரை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

தனக்கு ‘அஞ்சி நடக்கும்’முதல்வருக்கு டெல்லி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தின்போது கேட்டுக் கொண்டார். மக்களோ, மோடியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் கொண்டவரே தங்கள் தேர்வு என்று சொல்லிவிட்டனர். ஜனநாயகக் களத்தில் அஞ்சுவோருக்கு இடமே இல்லை என்பதை இதன் மூலம் நிரூபித்துவிட்டனர். கூடவே, மோடி - அமித் ஷா கூட்டுத் தலைமையின் கீழ், மக்கள் மீது ஒருதலைப்பட்சமாக முதல்வர் பதவிக்கான தலைவர்களும் வேட்பாளர்களும் திணிக்கப்படுவதை மக்கள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.

மக்களவைப் பொதுத் தேர்தலின்போது டெல்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் வென்ற கட்சி பாஜக. தவிர, மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 60-ல் முதலிடத்தில் இருந்தது. வெறும் 8 மாதங்களுக்குள் எப்படி இப்படி ஒரு சரிவு ஏற்பட்டது என்று பாஜக தலைமை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்து சிறுமைக்கு ஆளாகியிருக்கிறது. வெகு விரைவாகவும் வலுவாகவும் அது தன்னைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும்.

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நாம் வசந்த கால வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். மக்கள் எளிதில் அணுகும்படியான, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப அவர் நிர்வாகத்தை நடத்திச்செல்ல வேண்டும். அப்படியிருந்தால்தான் அது சாமானிய மக்களின் ஆட்சியாக இருக்கும்!

டெல்லி புதிய முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால்தெளிவான நிர்வாகம்

You May Like

More From This Category

More From this Author