Published : 26 Feb 2015 09:57 AM
Last Updated : 26 Feb 2015 09:57 AM

அரசு அதிகாரிகள் போல் காரில் போலி ஸ்டிக்கர் ஒட்டி வந்தவர்கள் கைது

சென்னை ராயப்பேட்டையில் அரசு அதிகாரிகள் போல் காரில் ‘ஜி’ என ஸ்டிக்கர் ஒட்டி வந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரசு உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் அரசுக்கு சொந்தமான வாகனத்தின் பதிவு எண்ணின் முன்னால் ' ஜி' என்ற ஆங்கில எழுத்து அல்லது 'அ' என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டு இருக்கும். அரசுக்கு சொந்தமான வாகனம் என்பதை அடையாளப்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த வாகனம் தங்கு தடையின்றி செல்ல சில நேரங்களில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் சிலர் கார்களில் ' ஜி' என்ற அடையாளத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கு கடந்த சில மாதங்களாக தகவல் கிடைத்துவந்தது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் அவர்களின் வசதிக்காக கார்களில் இப்படி போலியாக எழுதிக்கொண்டு அலைவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராயப் பேட்டையில் ' ஜி' என்ற எழுத்துடன் கடற்படை அதிகாரி என்ற முத்திரை பதித்து சில கார்கள் செல்வதாக ராயப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை மறித்து விசாரித்தனர். அதில் 'ஜி' என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும், கடலோர காவல்படை அதிகாரிகளுக்கான முத்திரையும் பதிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் திருச்சியை சேர்ந்த ராஜ வடிவேலை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி 2-வது தெருவில் புளூ ஸ்டார் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ராயப்பேட்டையை சேர்ந்த அரி (50), செந்தில் குமார் (32) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x