Published : 31 Jan 2015 09:37 AM
Last Updated : 31 Jan 2015 09:37 AM

விதிகளை மீறி மரங்களை வெட்டிய விவகாரம்: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.96.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - ஆந்திர கிரிக்கெட் சங்கத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

திருப்பதியில் விதிகளை மீறி மரங்களை வெட்டிய விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு, ஆந்திர கிரிக்கெட் சங்கம் ரூ.96 லட்சத்து 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ் தானத்துக்கு சொந்தமான இடம்,  வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 30 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்ற ஆந்திர கிரிக்கெட் சங்கம், அங்கு கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகளை கடந்த 2013-ம் ஆண்டு மேற்கொண்டது.

இப்பணிகளுக்காக அங்கிருந்த மரங்கள் உரிய அனுமதியின்றி வெட்டப்படுவதாகவும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கடந்த 2013 நவம்பர் 21-ம் தேதி செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு தாமாகவே முன்வந்து வழக்கை பதிவு செய்தது. அந்தப் பகுதியில் மரங்களை வெட்டவும் இடைக்காலத் தடை விதித்தது.

பதில் மனு

இது தொடர்பாக ஆந்திர அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர கிரிக்கெட் சங்கம் மற்றும் ஆந்திர மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கினை விரிவாக விசாரித்த பசுமைத் தீர்ப்பாய அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உரிய அனுமதியின்றி 25 ஏக்கர் பரப்பளவில் மரங்களை வெட்டியதற்காக ஆந்திர கிரிக்கெட் சங்கம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தீர்ப்பு வந்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் ரூ.96 லட்சத்து 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆந்திர மாநில வனத்துறை வழிகாட்டுதல்படி அந்த இடத்தில் 6 மாதங்களுக்குள் 4 ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும். இதை வனத்துறை கண்காணிக்க வேண்டும்.

மீதமுள்ள 5 ஏக்கர் நிலத்தில் உள்ள மரங்கள் மற்றும் புதர்களை வெட்டுவதாக இருந்தால் வனத்துறையிடம் இருந்து உரிய அனுமதி பெறவேண்டும். ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக 4 மரக் கன்றுகளை நடவேண்டும். கிரிக்கெட் மைதானம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவை இருப்பின் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அல்லது மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அவ்வாறு அனுமதி கோரி ஆந்திர மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கிரிக்கெட் சங்கம் அணுகினால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய உத்தரவுகளை வாரியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x