Published : 11 Jan 2015 11:27 AM
Last Updated : 11 Jan 2015 11:27 AM

தாத்தாவை கொன்று சூட்கேஸில் உடலை வைத்து கால்வாயில் வீசிய பேரன்: போதை பழக்கத்தால் நடந்த விபரீதம்

மாதவரத்தில் தாத்தாவை கொலை செய்து உடலை சூட்கேஸில் வைத்து கால்வாயில் வீசிய பேரனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மாதவரம் தணிகாச்சலம் நகர் கழிவுநீர் கால்வாயில் கடந்த 8-ம் தேதி மிதந்த சூட்கேஸில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் இருந்தது. கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இறந்து கிடந்தவரின் அடையாளங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன. இதைப் பார்த்த லான்சி வில்லியம்ஸ் என்பவர் மாதவரம் காவல் நிலையத்துக்கு வந்து, கொலை செய்யப்பட்டவர் தனது சகோதரர் மேக்ஸ்வெல் வில்லியம்ஸ்(70) என்று கூறினார். அவரது உடலை பார்த்தும் உறுதி செய்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளியை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். இதுகுறித்து மாதவரம் காவல் உதவி ஆணையர் சங்கரலிங்கம் கூறியதாவது:

"மேக்ஸ்வெல் சென்னை துறைமுகத்தில் ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகனுடன் தங்கியிருந்த மேக்ஸ்வெல், ஆண்டுக்கு ஒருமுறை சென்னை வந்து உறவினர்களை சந்தித்துவிட்டு செல்வார். இதுபோல சென்னை வந்த அவர் பெரவள்ளூரில் உள்ள தனது மனைவியின் அக்காள் மகள் செரியாள் வீட்டில் தங்கியிருந்தார். செரியாளின் மகன் மைக்கேல்(25). இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் போதைக்கு அடிமையாக இருக்கிறார்.

கடந்த 5-ம் தேதி மண்ணடியில் உள்ள வங்கிக்கு தாத்தா மேக்ஸ்வெல்லை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார் பேரன் மைக்கேல். அப்போது வங்கியில் இருந்து ரூ.80 ஆயிரம் பணத்தை எடுத்து மேக்ஸ்வெல் தனது பையில் வைப்பதை மைக்கேல் பார்த்திருக்கிறார். அன்று இரவு மது அருந்துவதற்காக தாத்தாவிடம் பணம் கேட்டிருக்கிறார் மைக்கேல். அவர் பணம் கொடுக்க மறுக்கவே அவரது கழுத்தை நெறித்து கொன்றிருக்கிறார் மைக்கேல். பின்னர் அவரது உடலை குளியல் அறையில் அடைத்துவிட்டு, அவரிடமிருந்த பணத்தை எடுத்து நண்பர்களுடன் சென்று மது குடித்திருக்கிறார்.

மறுநாள் ஒரு டிராலி சூட்கேஸை வாங்கிவந்து, அதில் மெக்ஸ்வெல்லின் உடலை வைத்து பூட்டியிருக்கிறார். ஆனால் முழுமை யாக பூட்ட முடியாததால், ஒரு படுக்கை விரிப்பை எடுத்து டிராலி யுடன் சேர்த்து கட்டியிருக்கிறார். பின்னர் அன்று இரவு அதை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச்சென்று, கழிவுநீர் கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.

மைக்கேலின் வீடு 2 தளங்களை கொண்டது. முதல் தளத்தில் மைக்கேலுக்கு தனி அறை உள்ளது. இதனால் மேக்ஸ்வெல் கொலை செய்யப்பட்டது மைக்கேலின் பெற்றோருக்கு தெரியவில்லை. மேக்ஸ்வெல்லை காணாமல் அவர் குறித்து மைக்கேலிடம் பெற்றோர் கேட்டபோது, வேறொரு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார் மைக்கேல்.

மேக்ஸ்வெல் குறித்து மைக்கேலின் பெற்றோரிடம் விசாரித்தபோது அவரை மோட்டார் சைக்கிளில் மைக்கேல் வங்கிக்கு அழைத்துச் சென்ற தகவலை தெரிவித்தனர். இதனால் மைக்கேலிடம் விசாரணை நடத்தியதில் தாத்தாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். ரூ.80 ஆயிரம் பணத்தில் ரூ.26 ஆயிரம் மட்டும் மைக்கேலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மீதிப் பணத்தை ஒரே நாள் இரவில் மதுவுக்காக செலவு செய்திருக்கிறார் மைக்கேல்" என்றார்.

கைது செய்யப்பட்ட மைக்கேல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x