Last Updated : 07 Jan, 2015 12:03 PM

 

Published : 07 Jan 2015 12:03 PM
Last Updated : 07 Jan 2015 12:03 PM

இயக்குநரின் தேவைகளை உணர்ந்து நடிக்க வேண்டும்: மெட்ராஸ் கலையரசனின் வெற்றி ரகசியம்

‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பனாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் கலையரசன். அந்தப் படத்தில் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பு, இவருக்கு கோடம்பாக்கத்தின் சொர்க்கவாசலைத் திறந்து விட்டுள்ளது.

நாயகனின் நண்பன் என்ற நிலையில் இருந்து முன்னேறி, இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் உஷா கிருஷ்ணன் இயக்கி வரும் ‘ராஜா மந்திரி’ படத்தில் நாயகனாக நடித்துவருகிறார் கலையரசன்.கும்பகோணத்தில் ‘ராஜா மந்திரி’ படப்பிடிப்பில் இருந்த கலையரசனிடம் பேசினோம்.

‘மெட்ராஸ்’ வெற்றியைத் தொடர்ந்து பரபரப்பான நாயகனாகிவிட்டீர்களே?

கடின உழைப்புக்கு பிறகு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். விஸ்காம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்த எனக்கு கல்லூரியில் அந்தத் துறையில் இடம் கிடைக்கவில்லை. அதனால் பிசிஏ படித்தேன். கலை மீது கொண்ட ஆர்வத்தால் கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களுடன் கதை விவாதம், நடிப்பு, நடனம் என்று அலைந்தேன். சின்னத்திரை தொடர்களில் நடிக்க நான் எடுத்த முயற்சிகள் வெற்றியடையவில்லை.

நண்பர் ஒருவரின் உதவியுடன் மிஷ்கின் சாரின் அறிமுகம் கிடைத்தது. அவரது அலுவலகத்தில் எனது புகைப்படங்களை கொடுத்து விட்டு வந்தேன். அந்த இடைவெளியில் அண்ணன் பா.இரஞ்சித், ‘அட்டகத்தி’ படத்துக்கான வேலைகளை தொடங்கினார்.

நான் முதலில் மிஷ்கின் சாரின் ‘நந்த லாலா’ படத்தில் நடித்தேன். அதனை அடுத்து ‘அட்டகத்தி’, ‘முகமூடி’, ‘மதயானைக் கூட்டம்’ படங்களில் நடித்தேன். அந்த நேரத்தில்தான் ‘மெட்ராஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட மிஷ்கின், பா.இரஞ்சித் இருவரும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இப்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?

இப்போது ‘ராஜா மந்திரி’ படத்தின் படப் பிடிப்பில் இருக்கிறேன். இது கிராமத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு காதல் கதை. அடுத்ததாக அஜயன்பாலா இயக்கத்தில் ‘மைலாஞ்சி’ படத்திலும், சதீஷ்கிருஷ்ணா இயக்கும் ‘ஜின்’படத்திலும் நடிக்கிறேன்.

அத்துடன் ‘உறுமீன்’என்ற படத்தில் வில்லனாகவும் நடிக்கிறேன். இந்தப்படம் ‘மெட்ராஸ்’ படத்தில் நடிப்பதற்கு முன்பே ஒப்பந்தமான படம். வில்லனாக எனக்கு இந்தப் படம் பெயர் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

மெட்ராஸ்’ திரைப்படம் உங்களுக்கு தனிக் கவனத்தை பெற்றுத்தரும் என்று நினைத் தீர்களா?

‘கலை நல்லா நடிச்சிருக்கான்’ என்று எல்லோரும் சொல்வார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால், அந்தப் படம் வெளிவந்த பிறகு கிடைத்த வரவேற்பை என்னாலேயே நம்ப முடியவில்லை. இதற்கு நான் இயக்குநர் பா.இரஞ்சித் துக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

உங்கள் குடும்பம்?

அப்பா ஹரிகிருஷ்ணன், அம்மா தமிழ்மணி, அண்ணன் ராஜேஷ்குமார், மனைவி சண்முகப்பிரியா, மகள் அதிதி கலையரசன். அன்பான குடும்பம். எல்லோரையும்போல அப்பா, அம்மாவுக்கு மகனின் வளர்ச்சியில் ஆசை இருந்தாலும். இந்த துறை எந்தமாதிரியான பின்னணியை கொடுக்கும் என்கிற பயம் இருந்தது. என் மனைவியும், அண்ணனும் கொடுத்த தைரியம்தான் தொடர்ந்து போராட வைத்தது.

உங்களுக்குப் பிடித்த படங்கள்?

‘புதுப்பேட்டை’. ஏக்கத்தோடு பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கும் ஒரு பையன், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின்னா ளில் ஒரு தாதாவாக மாறுகிறான். இந்தப் படத்தில் தனுஷ் மிரட்டியிருப்பார். அதைப் போல ரஜினி நடித்த வில்லத்தனமான பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நடிகனுக்கு அடிப்படையாக என் னென்ன தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நம்மிடம் உள்ள நடிப்பாற்றலை முடிந்த வரைக்கும் இயக்குநர்தான் வெளிக்கொண்டு வருகிறார். ஒரு இயக்குநரோட தேவைகளை உணர்ந்து முறையான ஒத்துழைப்பு கொடுத்து அவரிடம் நம்மை ஒப்படைத்து நடித்தாலே போதும். இதுவே அவருக்கும், அந்த கதாபாத்திரத்துக்கும் நன்மை செய்ததாக இருக்கும்.

படம்: சுரேஷ் சுகு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x