Published : 02 Jan 2015 11:27 AM
Last Updated : 02 Jan 2015 11:27 AM

சிட்னி டெஸ்ட்: இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா - ஆஸ்டன் அகர் அணியில் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே வென்று விட்ட ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரி கிறது.

அணியில் நாதன் லையன் இருக்கும் நிலையில், ஆஸ்டன் அகர் சேர்க்கப்பட்டுள்ளதிலிருந்து இத்தகவல் உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும்தான் அகர் விளையாடினார். 21 வயதாகும் அகருக்கு அதுதான் முதல் சர்வதேச டெஸ்டும் கூட.

அறிமுகப் போட்டியில் 98 ரன்கள் எடுத்து அசத்திய அகர், பந்து வீச்சில் சோபிக்கவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், நான்கு இன்னிங்ஸுகளிலும் சேர்ந்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டிலும் அவர் ஏழு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதுவும் 45.14 சராசரி வைத்துள்ளார். இதனால், அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுப்பினும், அவர் பிக்பாஸ் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அவரை உலகக் கோப்பை அணிக்குப் பரிசீலிக்கலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

சிட்னி டெஸ்டில் விளையாடும் பட்சத்தில் லையனுடன் இணைந்து செயல்படுவார். அடிலெய்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு லையனின் சிறப்பான பந்து வீச்சே காரணம்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறும்போது, “ஆஷஸ் தொடருக்குப் பிறகு அகர் தனது பந்து வீச்சை மேம்படுத்திக் கொண்டுள்ளார். அவர் சிறப்பாக பந்து வீசுவதாகவே கருதுகிறேன். அவரின் வருகை அணிக்கு பலமளிக்கும். சிட்னி ஆடுகளத்தைப் பொறுத்து அணித்தேர்வு இருக்கும்.

கடந்த ஆண்டு புற்கள் இருந்தன. அது முன்பு, சுழலுக்கு ஒத்துழைத்தது. எனவே, ஆடுகளத்தின் அமைப்பைப் பொறுத்து, விளையாடும் அணியில் அகர் சேர்க்கப்படுவார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x