Published : 02 Jan 2015 11:07 am

Updated : 02 Jan 2015 11:30 am

 

Published : 02 Jan 2015 11:07 AM
Last Updated : 02 Jan 2015 11:30 AM

உலக மசாலா: ஷெர்க் மனிதர்

நிஜ வாழ்க்கையில் இருக்கும் ஒரு மனிதர் அனிமேட் செய்யப்பட்ட ‘ஷ்ரெக்’ கதாபாத்திரம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது என்ற செய்தி பரவலாக இருந்து வருகிறது. அந்த மனிதர் மெளரிஸ் டில்லெட். ரஷ்யாவில் பிறந்த பிரெஞ்சுக்காரர். சின்ன வயதில் அழகாக இருந்ததால் ’பிரெஞ்ச் ஏஞ்சல்’ என்று எல்லோரும் மெளரிஸை அழைத்தனர். 17 வயதில் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகமானதால், அவரது முகம், கைகள், பாதங்களில் மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் ஒரு குத்துச் சண்டை வீரராக மாறினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் ஷ்ரெக் உருவம் போல ஆகிவிட்டது. பார்ப்பவர்கள் அனைவரும் அவரைப் பார்த்துதான் ஷ்ரெக் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால் ஷ்ரெக் உருவாக்கிய ட்ரீம் ஒர்க்ஸ் இதுவரை இந்த வதந்திக்குப் பதில் அளிக்கவில்லை.

உண்மையை ஒத்துக்கிட்டா ராயல்டி கொடுக்கணும்னு யோசிக்கிறாங்களோ?

க்யூபெக் பகுதியைச் சேர்ந்த 37 வயது ஃப்ரெடெரிக் டையான் வித்தியாசமான முறையில் தென் துருவத்துக்குச் சென்றிருக் கிறார். கைட் ஸ்கியிங் மூலம் பறந்தே தென் துருவத்தை அடைந்திருக் கிறார். 3,000 கிலோ மீட்டர்களை 45 நாட்களில் கடந்திருக்கிறார். மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் இருக்கும் வெப்பநிலையில், ஆபத் தான சூழல் நிலவும் பகுதியில் ஃப்ரெடெரிக்கின் சாதனை மிகவும் முக்கியமானது. அன்டார்க்டிகாவின் மையப் பகுதியை அடைந்த முதல் மனிதர் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார் ஃப்ரெடெரிக்.

ரிஸ்க் எடுத்து சாதிச்சிருக்கீங்க ஃப்ரெடெரிக், வாழ்த்துகள்!

இத்தாலியில் உள்ள பிரெஸ்சியா பகுதியில் ஒரு சர்க்கஸ் கம்பெனி விலங்குகளை வைத்து நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தது. அங்கிருந்த இரண்டு பாண்டா குட்டிகளைப் பார்த்து குழந்தைகள் படம் வரைந்து கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த போலீஸுக்கு பாண்டாக்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. சற்று நேரம் உற்றுக் கவனித்தபோது, அது பாண்டா போல் இருக்கும் நாய்க்குட்டிகள் என்பது தெரிய வந்தது. சர்க்கஸ் உரிமையாளரை அழைத்து விசாரித்தார். இது பாண்டாவும் நாயும் கலந்த கலப்பினம் என்றார் உரிமையாளர். நாயும் பாண்டாவும் வேற வேற இனங்கள், எப்படிக் கலப்பினமாகும் என்று மடக்கினார் போலீஸ்காரர். ஆறு மாதங்களுக்கு முன்பு நாயை பாண்டா போல் மாற்றி, போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார் சர்க்கஸ் உரிமையாளர். விசாரணை நடைபெற்று வருகிறது.

அடப்பாவிகளா… விலங்குகளுக்கும் போலி பாஸ்போர்ட்டா…


அடையாளத்துக்குத்தான் பெயர்கள். ஆனால் பெயர் வைப்பதில் சிலர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஜாக் டேனியல்ஸ் தன்னுடைய குழந்தைகளுக்கு மது பானங்களின் பெயர்களைச் சூட்டுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார். ஜாக்கின் அப்பா ஜாக் டேனியல்ஸ் விஸ்கியைச் சுவைத்துக்கொண்டிருந்தபோது, குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றிப் பேச்சு வந்திருக்கிறது. உடனே ஜாக் டேனியல்ஸ் என்று வைத்துவிட்டார். இதுவரை யாருமே இந்தப் பெயரில் தனக்குத் தெரிந்து இல்லை என்கிறார் ஜாக். தன்னுடைய தனித்துவமான பெயரை முதலில் யாரும் நம்புவதே இல்லை. அடையாள அட்டையைப் பார்த்துதான் பெயரை நம்புகிறார்கள். பிறகு வியக்கிறார்கள். என் பெயர் பேசக்கூடிய விஷயமாக மாறியதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதனால் என் குழந்தைகளுக்கும் வித்தியாசமான பெயர்களையே சூட்ட இருக்கிறேன் என்கிறார் ஜாக். முதல் குழந்தைக்கு ஜிம் பீம் என்று பெயர் சூட்டிவிட்டார். அடுத்த குழந்தை பையனாக இருந்தால் இவான் வில்லியம்ஸ். பெண்ணாக இருந்தால் ஷெர்ரி. இந்த மூன்று பெயர்களுமே மது பானங்களின் பெயர்கள்தான்!

வித்தியாசம் காட்ட வேண்டியதுதான்… அதுக்காக இப்படியா?

You May Like

More From This Category

More From this Author