Published : 06 Dec 2014 11:23 AM
Last Updated : 06 Dec 2014 11:23 AM

அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலி: பஸ்ஸுக்கு தீ வைப்பு; சாலை மறியல்

மாநகர பஸ் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அந்த பஸ்ஸுக்கு தீ வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அடுத்த வெங்கல்குப்பத் தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் ஆதி என்கிற நெடுஞ்செழியன் (12), மகள் மேனகா(14) ஆகிய இருவரும் வெங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், முறையே 6 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இருவரும் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக வெங்கல்-பெரியபாளையம் சாலை யில் நடந்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியபாளையத்திலிருந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையை நோக்கி தடம் எண் 563 என்ற மாநகர போக்குவரத்துக்கழக பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்ஸை தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன் (40) என்ற ஓட்டுநர் இயக்கினார்.

வெங்கல்-பெரியபாளையம் சாலையில் வந்தபோது அந்த பஸ் நெடுஞ்செழியன், மேனகா ஆகிய இருவர் மீதும் மோதியது. இதில், சிறுவன் நெடுஞ்செழியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயமடைந்த மேனகா திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் காட்டுத்தீபோல பரவியதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். ‘மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு வந்தால் தான் இறந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவோம்’ என கூறி போலீஸாரை பொது மக்கள் தடுத்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ஆவேசமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பஸ்ஸின் ஓட்டுநர் இருக்கைக்கு தீ வைத்தனர்.

வெங்கல் போலீஸார் தீயை அணைத்து, பஸ் முழுவதும் தீ பரவாமல் தடுத்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விடாமல் தடுக்க, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைந்துபோகச் செய்த னர். அதன் பிறகு, இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

ஓட்டுநர் செல்போன் பேசினாரா?

சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் சித்ரா, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., குமரவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். வெங்கல் பகுதியில், பள்ளி நேரங்களில் பஸ்கள் மெதுவாக செல்லவும், வேகத்தடைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் அப்போது வலியுறுத்தினர். உயிரிழந்த நெடுஞ்செழியனின் குடும்பத்தா ருக்கு நிவாரண நிதி வழங்குவ தோடு, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப் பதாக வட்டாட்சியர் சித்ரா உறுதியளித்தார்.

சம்பவத்துக்கு காரணமான பஸ்ஸின் ஓட்டுநர் பரந்தாமனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் பரந்தாமன் செல்போன் பேசிக்கொண்டே பஸ்ஸை இயக் கியதுதான் விபத்துக்கு காரணம் என சம்பவ இடத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் கோபத்துடன் கூறினர். இந்த சம்பவத்தால், வெங்கல் பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மேனகாவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ‘விபத்து குறித்து தமிழக அரசுக்கு உடனடியாக தகவல் தெரி வித்து நெடுஞ்செழியனின் பெற்றோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி பெற்றுத் தர போர்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x