Published : 25 Dec 2014 09:54 AM
Last Updated : 25 Dec 2014 09:54 AM

சிகரத்தோடு ஒரு சிநேகிதம்: பாலகுமாரன்

டைரக்டர் பாலசந்தர் சாரை வேலை நேரத்தில் பார்ப்பதைவிட, வேலை முடிந்து அவரோடு இருக்கறது ரொம்பப் பெரிய சந்தோஷம்! அவருக்கு, ‘தான் பல படிகள் உயர்ந்து நிற்கிறோம் மற்றவர் களைவிட’ என்கிற எண்ணமே இல்லை. அவருடைய ஃபியட் கார்ல முன்னாடி அவர் உட்கார்ந்துகொள்வார். பின்னாடி நானும் வசந்தும் இருப்போம். அன்றைக்கு வேலை செஞ்ச சந்தோஷம் முகத்தில் தளும்பும். ஏ.சி. கார். கத்ரி கோபால்நாத்தினுடைய சாக்ஸஃபோன் மியூசிக், கையில் அன்றைய மாலை பேப்பர். வேகமாக புரட்டிப் பார்த்துவிட்டுத் திருப்பி என்னிடம் கொடுத்துவிடுவார்.

“ஷூட்டிங் இல்ல, சும்மா வாடா. பேசிட்டிருக்கலாம்” அப்படின்னு சொல் வார். 10 மணிக்கு வீட்டுக்குப் போனால், ஷெல்ஃப்லேர்ந்து தான் வாங்கிய கேடயங்களை எல்லாம் எடுத்து, ஒரு கிழிஞ்ச துணியால் கடகடன்னு சுத்தம் பண்ணிட்டிருப்பார். கீழே தரையில் உட்கார்ந்திருப்பார். நாம் எடுத்து எடுத் துக் கொடுத்தா, தன் கையாலயே சுத்தம் பண்ணுவார்.

‘’சார் இதுக்கெல்லாம் ஆள் இருக்கே. நீங்க ஏன்?’’ என்று கேட்டால், “ப்சு... ஒவ்வொண்ணையும் தொடும்போதும், இது யார் கொடுத்தாங்க? இந்த கேடயம் எதுக்காக கொடுத்தாங்கன்னு தோணும். ஜஸ்ட் ரீ-கலெக்டிங்க் அண்ட் என்ஜாயிங். இதை எல்லாம் துடைக்கலடா… இது எதுக் குன்னு நினைச்சுப் பார்த்து சந்தோஷப் பட்டுண்டிருக்கேன்” ஆச்சர்யமா இருக்கும் அவர் பேசறது. ஒவ்வொரு பரிசை யும் துடைக்கிறபோது… அதைக் கொடுத்த வர்களையும், கொடுத்த நேரமும், எதுக்குக் கொடுத்தாங்க என்கிற சந்தோஷமும் அவர் முகத்தில் தெரியும்.

ரொம்ப சிம்பிளான மனுஷன். அந்தக் கிராமத்து மத்தியதர வகுப்பு மனுஷன் அவர்கிட்டேயிருந்து போகவே இல்லை. அவர் படங்களின் கருப்பொருளும் இந்த மத்தியதர வர்கத்துப் போராட்டங் களாகத்தான் இருக்கும்.

ஒரு ட்ராலி ஷாட். நான் அளவா ட்ராலி தள்ளணும். கன்னட நடிகர் ஒருவர் நீண்ட டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார். நான் நடிகரைப் பார்த்துக்கொண்டே ட்ராலியைத் தண்டவாளம் விட்டு இறக்கிட்டேன். நல்லவேளை அந்த உதவி கேமராமேன் தனது கேமரா சிதிலம் அடையாமல் கெட்டியா பிடிச்சிட்டார். எல்லோரும் எனக்கு முதுகுல ஒரு அடி விழும், திட்டு விழும் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். ‘‘கேமராவுக்கு ஒண்ணும் ஆகலையே? டேய்… நடிகர் மேலயே மனசு இருந்தா கேமரா தெரியாது. ஒரு டைரக்டருக்கு கவனம் நடிகர் மேலயும் இருக்கணும். கேமரா மேலயும் இருக்கணும். கேமரா மேல கண்ணோட நடிகரைப் பார்க்கணும். நடிகரை மட்டும் பார்க்கக் கூடாது. அவர் பிரமாதமா நடிச்சார். மயங்கிட்ட. ஜாக்கிரதை.’’

இதுதான் பாடம். ’நடிகரை நடிப்பில் பார்க்காது… நடிகருடைய நடிப்பை கேமரா மூலமே பார்ப்பது, விலகி இருந்தாலும் கேமராவில் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்ப்பதே மிக முக்கியம்’ என்பதை அன்று கொஞ்சம் அதிகப்படியாக விளக்கினார் டைரக்டர். ஒரு விஷயத்தை விளக்குவதில், தெரிவிப்பதில் அவர் கூர்மைமிக்கவர்.

சினிமாவிலிருந்து எழுத்தே முக்கியம் என்று நான் அமர்ந்தபோதும், என் மீது சிநேகமாக இருந்தார். “எழுத்தாளனுக்கு சினிமா முக்கியம். அந்த சினிமா அவனுக்கு வேறு ஒரு டைமன்ஷன் கொடுக்கும். இன்னும் பவர்ஃபுல்லா நீ எழுதுவ பார்…” என்று ஆசீர்வதித்தார்.

மிகவும் எக்ஸ்பிரஸிவ்வான ஒரு மனிதர். உடனே நன்றி சொல்லிடணும். உடனே அன்பு சொல்லிடணும். உடனே கோபத்தைக் காட்டிடணும். அதை ஒளிச்சு வைக்க தெரியாது. இந்தப் பண்புகள்தான் பலரை பாலசந்தரை நோக்கிக் கவர்ந்தன.

எமனோடு போராடி ஜெயித்து வந்து விடுவார் என்று நினைத்தேன். 84 வயது தளர்ச்சி அவரை ஜெயிக்கவிடவில்லை. ஆனால், அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவர் கொடுத்த கலைப் படைப்புகள்… என் றென்றும் நம்மோடு நிற்கும்.

சினிமாவில் வாழ்க்கையை அழுந்தப் பதித்துப் பாடம் சொன்னவர். சிறந்த கதாசிரி யர். நல்ல எழுத்தாளர். நல்ல ஆசிரியர். பூமியின் மீதும், வாழ்வின் மீதும் சிநேகம் கொண்டவர். நன்கு வாழ்ந்தார். வாழ்வின் சுக துக்கங்களை முழுமையாக அனுபவித்தார். அவற்றை வெளிப்படுத்தினார். பாலசந்தர் ஒரு சிறந்த மனிதர். நல்ல கலைஞன். வாழ்க அவர் புகழ்.

அவரும் நானும் வசிப்பது ஒரே தெரு. வாரன் ரோடு. அவர் வீடு தாண்டும் போதெல்லாம் அவரோடு வேலை செய்தது ஞாபகம் வரும். நின்றதும் நடந்ததும் நினைவில் வரும். இப்போது கிடந்ததும் மனதில் அழுந்தியிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x