Published : 23 Dec 2014 08:51 am

Updated : 23 Dec 2014 11:31 am

 

Published : 23 Dec 2014 08:51 AM
Last Updated : 23 Dec 2014 11:31 AM

‘ஈகோ பார்க்காதீர்கள்.. எல்லை தாண்டாதீர்கள்’: போலீஸ் வழக்கறிஞர் மோதல் தவிர்க்க அறிவுரை

திருச்சி மாநகர போலீஸை கண்டித்து நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் காவல் துறை உதவி ஆணையரின் ஜீப் ஓட்டுநரான காவல் படையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார்.

போலீஸார் வழக்கறிஞர்கள் மோதல்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகிவிட்டன. கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதல் எளிதில் மறக்கக்கூடியதல்ல.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு விசாரணைக்காக 189 பக்கம் கொண்ட அறிக்கையை முன்னாள் டிஜிபி ராமானுஜம் தாக்கல் செய்தார். அதில், ‘‘தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மீது 1,424 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 276 வழக்குகள், மதுரை மாவட்டத்தில் 100, நெல்லை மாவட்டத்தில் 121, கோவையில் 134, தேனியில் 34, திண்டுக்கல்லில் 18, ராமநாதபுரத்தில் 29, சிவகங்கையில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் - வழக்கறிஞர்கள் மோதல் போக்கு, அதற்கான தீர்வுகள் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்களின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன்:

போலீஸார் எப்படி வழக்கு பதிவு செய்தாலும் நீதிமன்றத்தில்தான் ஆஜர் செய்யப்போகிறார்கள். வழக்கறிஞர்கள் அங்கு திறமையை காட்டலாம். ‘வழக்கறிஞர்களின் விருப்பம்போல போலீஸ் செயல்பட வேண்டும். வழக்கு பதிவு செய்யவேண்டும்’ என்பதை எப்படி ஏற்கமுடியும். சட்டத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இருவருக்கும் உள்ளது. இரு தரப்பினரும் அதை உணர்ந்து செயல்பட்டால் மோதல் உருவாகாது.

சென்னை காவல் தலைமையக கூடுதல் ஆணையர் ஆர்.திருஞானம்:

இருவருக்கும் இடையே இருக்கும் ஈகோதான் பிரச்சினைக்கு முதல் காரணம். காவல் நிலையத்துக்கு வந்து வழக்கறிஞர் வாக்குவாதம் செய்யும்போது, ‘கைது செய்வேன், வழக்கு பதிவு செய்வேன்’ என்பார் காவலர். ‘என் மீதே வழக்கு பதிவு செய்வீர்களா?’ என்று அவர் திருப்பிக் கேட்பார். இது மோதல் வரை வந்துவிடும். தவறு செய்யும் வழக்கறிஞர்கள்கூட தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று நினைக்கின்றனர். சில வழக்கறிஞர்கள் மட்டுமே இவ்வாறு செய்கின்றனர். திறமையாக வாதாடுபவர்கள் இதுபோல பிரச்சினை செய்வதில்லை. தொழில் தவிர்த்த சூழல்களில் காவல் துறையினரும் வழக்கறிஞர்களும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ்:

‘நாங்கள் அரசு ஊழியர்கள். முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யும் அதிகாரம் பெற்றவர்கள். விசாரணையில் குறுக்கிடக்கூடாது’ என்கின்றனர் போலீஸார். தங்களது வேலையில் வழக்கறிஞர்கள் குறுக்கிடுவதாக போலீஸார் கருதுகின்றனர். ஆனால் தவறு நடக்கும்போது, சட்டத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கும் உரிமையை வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் வழங்கியுள்ளது. இது அரசியல் சட்ட உரிமை. அதுபோல, மனித உரிமை சட்டத்தின் கீழும் கேள்வி கேட்கும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது. இரு தரப்பினரும் ஈகோவை விட்டு பரஸ்பரம் மரியாதை கொடுத்து விட்டுக்கொடுத்து செயல்பட்டால் பிரச்சினை வராது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.கண்ணதாசன்:

வழக்கறிஞர்களும் போலீஸாரும் ஒருவரை ஒருவர் எதிரிபோலப் பார்க்கின்றனர். இரு தரப்பினரும் அவரவர் எல்லையைத் தாண்டாமல் மக்கள் நலனுக்குப் பணியாற்ற வேண்டும். பிரச்சினை உருவாகும் நிலை ஏற்பட்டால், மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு போலீஸார் கொண்டுசெல்ல வேண்டும். இல்லாவிட்டால் பார் கவுன்சிலில் முறையிடலாம். வழக்கறிஞர் சங்கங்களும் நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே வழக்கறிஞர்களுக்குத் துணைபோக வேண்டும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

போலீஸ் வழக்கறிஞர் மோதல்மோதல் தவிர்க்க அறிவுரைசென்னை உயர் நீதிமன்ற வளாகம்2009-ம் ஆண்டு பிப்ரவரி 19 மோதல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author