Published : 09 Aug 2017 09:22 AM
Last Updated : 09 Aug 2017 09:22 AM

ஒரே வீட்டில் ‘காந்தியும்’ - ‘ஹிட்லரும்’: ‘சகுந்தலாவின் காதலன்’ இயக்குநர் பி.வி.பிரசாத் நேர்காணல்

கா

லில் விழுந் தேன் படம் மூலம் இயக்குநராகவும், அதே படத்தில் ‘நாக்க முக்க’, ‘தோழியா என் காதலியா’ பாடல்கள் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமாகி சினிமா வட்டாரத்தையும், ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பி.வி.பிரசாத். தற்போது ‘சகுந்தலாவின் காதலன்’, ‘வேலையில்லா விவசாயி’ ஆகிய படங்களின் இயக்கம், நடிப்பு என்று கவனம் செலுத்தி வருகிறார். ‘சகுந்தலாவின் காதலன்’ படத்தின் ரிலீஸ் வேலைகளிலும், ‘வேலையில்லா விவசாயி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் வேலைகளிலும் இருந்த பி.வி.பிரசாத்துடன் ஒரு நேர்காணல்..

‘காதலில் விழுந்தேன்’ என்ற ஹிட் படம் கொடுத்த பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

கொஞ்சமான சினிமா அறிவோடு உள்ளே வந்து அதைக் கற்றுக்கொண்டே எடுத்த படம்தான் ‘காதலில் விழுந்தேன்’. பல தயாரிப்பாளர்கள் வேண்டாம் என்று தவிர்த்த கதை அது. விஜய்மில்டன், விஜய் ஆன்டனி மாதிரியான நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களின் துணையோடு நானும் நண்பர்களுமே படத்தை எடுத்து ரிலீஸ் செய்தோம். ஒரு இயக்குநராக, பாடலாசிரியராக எனக்குத் தனித்த பெயர் வாங்கிக்கொடுத்தது.

அதற்குப் பிறகு, ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ என்ற படத்தை எடுத்தேன். அது சரியாக போகவில்லை. தவறான கூட்டணி சேர்ந்து செய்த பயணத்தில் கிடைத்த அனுபவமாக அதை எடுத்துக்கொண்டேன். அந்த நாட்களில் ‘காதலில் விழுந்தேன் இயக்குநர்’ என்று எனது பெயரைப் போட்டு வேறொருவரின் புகைப்படம்கூட இருக்கும். இதில் நிறைய பாடம் கற்றேன். ஒரு கட்டத்தில், நமக்கென்று இருக்கும் இடத்தை சரியாக, முறையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த முயற்சியில்தான் இயக்கத்தோடு நடிக்கவும் செய்வோம் என்று இறங்கியிருக்கிறேன். இந்த பாதை சரியான பயணத்தை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இசையமைப்பாளர் ஆகும் ஆசையில்தானே சினிமாவுக்குள் வந்தீர் கள்?

அமைதியான சூழலில் கற்கவேண்டிய விஷயம் இசை. அந்த ஆர்வத்தில்தான் ‘நாக்க முக்க’, ‘தோழியா என் காதலியா’ போன்ற பாடல்களை எழுதினேன். அது நல்ல வரவேற்பு பெற்றது. பாடல் எழுதும் வாய்ப்புகளும் வந்தன. அதன்பிறகு, இசைக்கேற்ற முழு தகுதி எனக்கு இருக்கிறதா? என்று எனக்கு நானே கேள்வி எழுப்பினேன். பின்னர், இசையில் இருந்து மெல்ல விலகினேன். ‘கோலிசோடா’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்புகூட வந்தது. தவிர்த்துவிட்டேன். நமக்கான அடையாளத்தை இயக்கம், நடிப்பில் காட்டுவோமே என்ற ஈர்ப்பு உள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது.

‘சகுந்தலாவின் காதலன்’ படம், நாயகியை மையமாக கொண்டதா?

ஒருவரது மகிழ்ச்சியைத் திருடி இன்னொருவர் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதுதான் கதையின் கரு. அவ்வாறு மகிழ்ச்சியைத் திருடுவது பிச்சை எடுப்பதற்குச் சமம் என்பதையும் திரைக்கதை பேசும். ஒரே வீட்டில் காந்தியும், ஹிட்லரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? இப்படத்தில் காந்தி போன்ற குணநலன்களோடு நாயகி பானு இருப்பார். ஹிட்லர் போன்ற அம்சங்களோடு நாயகன் இருப்பார். அவர்கள் இடையே நடக்கும் நிகழ்வுகளைப் புதுமையாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.

இந்தப் படம் வெளிவரும் முன்பே அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டீர்களே?

சோம்பேறித்தனம் ஒட்டிவிடக்கூடாது என்றுதான் உடனடியாக ‘வேலையில்லா விவசாயி’ பட வேலைகளைத் தொடங்கினோம். நானும் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. நெல் கொள்முதல் விலையைக் குறைக்கும் அரசுகள், உரம் விலைகளைக் குறைப்பதில்லை. நம் கிணற்றில் அள்ளிய தண்ணீராக இருந்தாலும், அதையே பாட்டிலில் அடைத்து ரூ.20-க்கு விற்கப்பட்டால்தான் நாம்கூட மதிக்கிறோம். சூழல் அப்படி ஆகிவிட்டது. ஏடிஎம் மையங்களில் காவலாளியாக இருப்பவர்களில் 100-க்கு 90 பேர் விவசாயிகள். இப்படியே போனால், விவசாயம் எப்படி நடக்கும்? நமக்கெல்லாம் உணவு எப்படி கிடைக்கும்? இங்கு நிறைய விஷயங்கள் மாறவேண்டி உள்ளது. இவற்றையெல்லாம் பேசும் படம்தான் ‘வேலையில்லா விவசாயி’.

கவிதைகள், எழுத்து என்று இலக்கியத்திலும் கவனம் செலுத்து கிறீர்களே?

கவிதைகள் மீது எனக்கு எப்போதுமே தனி காதல் உண்டு. அதனால்தான், இளங்கலையில் உயிரியல் படித்தும், முதுகலையில் தமிழைத் தேர்வு செய்தேன். இப்போதும் தமிழ்தான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த ஆர்வம்தான் ‘சகுந்தலாவின் காதலன்’ படத்திலும் கவிஞர்கள் மு.முருகேஷ், அ.வெண்ணிலா உள்ளிட்ட நண்பர்களுடன் பணியாற்ற வைத்திருக்கிறது. கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதிதான் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியம், இலக்கியவாதிகளுக்கு என் படங்களில் எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x