Published : 01 Aug 2017 08:35 AM
Last Updated : 01 Aug 2017 08:35 AM

எந்தவித தடையுமின்றி இன்று படப்பிடிப்பு நடக்கும்: தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் தகவல்

பெப்சி அமைப்பினருடன் வேலை செய்ய மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கூறவில்லை. எந்தவித தடைகளுமின்றி நாளை (இன்று) படப்பிடிப்பு நடைபெறும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

திரைப்பட தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்துக்கும்(பெப்சி) இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இரு அமைப்புகளுக்கும் இடையே சரியாக உடன்பாடு ஏற்படாததால் தொடர் அறிக்கைகள் மற்றும் மறுப்பு கடிதங்கள் வாயிலாக பிரச்சினைகள் அதிகரித்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் பெப்சி அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ‘சம்பளப் பிரச்சினை 8 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதில் சரியான முடிவு எட்டாததால் ஆகஸ்டு 1 (இன்று) முதல் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள மாட்டார்கள்’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து நேற்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-

பெப்சி தொழிலாளர்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை பார்க்க மாட்டோம் என்று கூறவே இல்லை. அவர்களுடனும் வேலை பார்க்கிறோம் என்பதுதான் எங்களின் முடிவு. பெப்சி தொழிலாளர்கள் எங்களுடைய எதிரிகள் அல்ல. அவர்களது வயிற்றில் அடிப்பது எங்களுடைய வேலையும் இல்லை. சம்பளம் தொடர்பாக பெப்சி சார்பில் வைக்கப்படும் பொது நிபந்தனைகள் சில தயாரிப்பாளர்களுக்கு சரியானதாக படவில்லை.

இன்றைய சூழ்நிலையில் படம் எடுக்கும் பல தயாரிப்பாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்படியான ஒரு நிலையில் ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் சில நிபந்தனைகள் எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதைத்தான் நாங்கள் முன் வைக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரி, டிக்கெட் கட்டணம் ஆகியவற்றிற்கு தகுந்தமாதிரி பல விஷயங்களை எப்படி நடைமுறைப்படுத்துகிறமோ அதைப்போலவே பெப்சி அமைப்பின் சில சங்கங்களின் சம்பள விஷயத்திலும் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறோம். அதை அவர்கள் ஏற்க வேண்டும்.

தயாரிப்பாளர்கள் உரிமை

பெப்சி அமைப்பினர் திரைப்பட தயாரிப்பாளர்களைப்போல எப்படி ஒரு ஆவணப்படம் எடுக்கும் யூனிட்டுக்கும், டெலிவிஷன் யூனிட்டுக்கும், விளம்பர படங்களுக்கும், வெளி மாநில படங்களுக்கும் வேலை பார்க்க உரிமை உண்டோ அதேபோல தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் ஊழியர்களை நியமித்துக்கொள்ள உரிமை உள்ளது. அதன்படி வேலை பார்ப்போம் என்பதே எங்களுடைய தற்போதையை முடிவு. மற்றவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக படம் எடுக்க முடியாது. வேலைக்கான பணத்தை மட்டுமே தயாரிப்பாளர்களால் கொடுக்க முடியும். பெரிய நடிகர்களின் படங்கள் 10 சதவீதம்தான் இங்கே நடக்கிறது. மீதமுள்ள 90 சதவீத சிறு பட்ஜெட் படங்களுக்காகத்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, யாருடன் வேலை பார்க்க வேண்டும், எவ்வளவு தொழிலாளர்களுடன் வேலை பார்க்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்வோம். இதுதான் எங்கள் உறுதியான முடிவு.

ஒளிப்பதிவாளர்கள் சங்கம், நடிகர், நடிகைகள் ஒத்துழைப்பு

இன்று எப்போதும்போல படப்பிடிப்பு நடக்கும். ஒளிப்பதிவாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தொழில் அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறார்கள். அதனால் படப்பிடிப்பில் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது. எப்போதும்போல திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கும்

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x