Last Updated : 12 May, 2017 02:29 PM

 

Published : 12 May 2017 02:29 PM
Last Updated : 12 May 2017 02:29 PM

தமிழக முதல்வருடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

தமிழக முதல்வருடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து பேசியுள்ளார்கள். அப்போது பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.

மே 30ம் தேதி தமிழ் திரையுலகினர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளார்கள். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்த நேரம் ஒதுக்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். தமிழக அரசு தங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை எனில் கண்டிப்பாக வேலைநிறுத்தம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு இன்று காலை நேரம் ஒதுக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விஷால், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து முதல்வரை சந்தித்தார்கள்.

முதல்வரை சந்தித்து என்ன கோரிக்கை வைத்தீர்கள் என்பது குறித்து தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் பிரபுவிடம் கேட்ட போது "பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகினருக்கு மானியம் கொடுக்காமல் இருப்பது, விருதுகள் கொடுக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட விஷயங்களைக் கேட்டுள்ளோம். திருட்டு விசிடி ஒழிப்பதற்காக இருக்கும் படையின் பலத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கேட்டோம். கேபிள் தொலைக்காட்சி மற்றும் தனியார் பேருந்துகளில் எங்களுடைய அனுமதியின்றி எங்களது படங்களை திரையிடக் கூடாது என்று எடுத்துரைத்தோம். திரையரங்குகளின் டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.

எங்களது கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட தமிழக முதல்வர், 'எங்களால் முடிந்ததை செய்து கொடுக்கிறோம்' என்று தெரிவித்தார். வேலைநிறுத்தம் தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை. அடுத்ததாக அந்தத் துறைச்சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகளோடு விவாதித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வருவார்கள்.

நீண்ட வருடங்கள் கழித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முதல் முறையாக முதலமைச்சரை சந்தித்துள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளை வைத்துள்ளோம். தமிழ் திரையுலகிற்கு நல்லது நடக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x