Last Updated : 14 Apr, 2017 05:55 PM

 

Published : 14 Apr 2017 05:55 PM
Last Updated : 14 Apr 2017 05:55 PM

முதல் பார்வை: ப.பாண்டி - நிறைவான சினிமா!

சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த ராஜ்கிரணின் காதலும் வாழ்வுமே 'ப.பாண்டி'.

ராஜ்கிரண மகன் வீட்டில் பேரக் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கிறார். காதலுக்கு உதவுவது, காரைத் தள்ளிவிடுவது, கஞ்சா வியாபாரத்தைத் தடுப்பது என உதவி செய்யப் போய் அது எல்லாம் மகன் பிரசன்னாவுக்கு தொந்தரவாகவே அமைகிறது. அந்த எரிச்சலில் ராஜ்கிரணிடம் கோப முகம் காட்டுகிறார் பிரசன்னா. இனி யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று முடிவெடுக்கிறார் ராஜ்கிரண். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது, ராஜ்கிரண் என்ன ஆகிறார் , எங்கே செல்கிறார் என்பது மீதிக் கதை.

பெற்றோர் பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் முறையையும், பெரியவர்களின் தனிமையும் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் தனுஷ். அறிமுக இயக்குநர் என்பதற்கான எந்த சுவடும் இல்லாமல் உணர்வுகளை கச்சிதமாக சொன்ன விதத்தில் தனுஷ் கவனிக்க வைக்கிறார்.

ஸ்டன்ட் மாஸ்டருக்குரிய உடல் மொழி, தோற்றத்துடன் ராஜ்கிரன் கம்பீரம். தன்னளவில் நல்லது என்று நினைத்து உதவுவது, அதனால் வரும் சங்கடங்களை சமாளிப்பது, கள்ளம்கபடமில்லால் மனதை வெளிப்படுத்துவது, குட்டீஸ்களுடன் உற்சாகமாய் இருப்பது, மாறாக் காதலுடன் அன்பில் திளைப்பது, வார்த்தை தவறினால் கோபப்படுவது, ஆக்‌ஷனில் அதகளம் பண்ணுவது என படம் முழுக்க தேர்ந்த நடிப்பை ராஜ்கிரண் வழங்கியுள்ளார்.

பொறுப்பை உணர்ந்து செயல்படுவதும், நினைவுகளில் மூழ்கி கரைவதுமாக ரேவதி தன் கதாபாத்திரத்தை மிகச் சரியாகக் கையாள்கிறார்.

அடக்கமான, தேவையான நடிப்பை எந்தக் குறையுமில்லாமல் பிரசன்னா வழங்கியிருக்கிறார். ஏக்கத்தையும், இழப்பையும் அவர் வெளிப்படுத்துவிதம் மிக யதார்த்தம். சாயாசிங், ரின்சன், ராகவன், சவி ஷர்மா, வித்யுலேகா, செண்ட்ராயன் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

சுமார் 25 நிமிட ஃபிளாஷ்பேக் காட்சி படத்தின் ஜீவனாய் எதிரொலிக்கிறது. தனுஷ் - மடோனா செபாஸ்டியனின் காதல் அத்தியாயம் படத்துக்கு வலு சேர்க்கிறது.

கிராமத்து வாசத்தையும், நகரத்தின் மறுபக்கத்தையும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நம் கண்களுக்குக் கடத்துகிறார். ஷான் ரோல்டனின் இசை படத்துக்கு கூடுதல் பலம். ஒரு சூரக்காத்து ஊரைப் பார்த்து போகுது, வீசும் காத்தோடதான், வெண்பனி மலரே ஆகிய பாடல்கள் மனதில் நிற்கின்றன. ஃபிளாஷ்பேக் காட்சியின் பின்னணி இசையில் இளையராஜாவை இதயத்தில் நிறுத்தி இசையமைத்திருக்கும் விதம் ரசனை.

''அவங்கதான் நம்ம வாழ்க்கை, நம்ம அவங்க வாழ்க்கையா'', ''உன் பையன் வாழ்க்கையையும் உன் பேரப் பசங்க வாழ்க்கையையும் வாழ்றியே தவிர உன் வாழ்க்கையை வாழ்ற மாதிரி எனக்குத் தெரியலை'','' 28 வயசானாலும் 60 வயசானாலும் துணை துணைதான்'', ''வேலை வரலாம் போகலாம் வெட்டிதான் நிரந்தரம்'' ''ஏன் மழையில நனையுற? குடைக்குள் வா…'' , ''ஏன் குடைக்குள் இருக்கே? மழைக்கு வா'' போன்ற பளிச் வசனங்கள் அர்த்தமுள்ளவை.

அப்பா- மகன்- பேரன் உறவின் பாசப் பிணைப்பு, சரக்கடித்துவிட்டு ராஜ்கிரண் மகனிடம் பேசும் காட்சி, பேரிளம் வயதில் இருக்கும் காதலின் அடர்த்தியை ஃபேஸ்புக்கில் பரிமாறும் தருணங்கள், பதில் வராமல் காத்திருக்கும் படபடப்பு, அதற்குப் பிறகான துணிச்சல் என அழகான தருணங்களை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.

அலுவலகத்தில் பிரசன்னா பேசும் வசனம் கிளிஷேவாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சின்ன சின்ன குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் 'ப.பாண்டி' நிறைவான சினிமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x