Published : 24 Feb 2014 00:00 am

Updated : 06 Jun 2017 19:53 pm

 

Published : 24 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 07:53 PM

ஜெயலலிதா- இயக்குநர்களின் கதாநாயகி

அது 1980-ம் ஆண்டு. சினிமாத்துறையில் இருந்து விலகியிருந்த ஜெயலலிதா மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். பீம்சிங்கின் புதல்வர் பி. லெனின்தான் இயக்குநர். ‘நதியைத் தேடி வந்த கடல்’ இதுதான் படத்தின் தலைப்பு. எதிர்பாராமல் அமைந்த பொருத்தமான தலைப்பு. அன்று பிரபல சினிமா பத்திரிகையாளராக இருந்த பொம்மை இதழின் செய்தியாளர், ‘வேதா இல்லத்தில்’ பேட்டி எடுக்கிறார்.

“முதன்முதலாக இயக்க வந்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் பி.லெனின் பற்றி உங்கள் கருத்தென்ன?” என்ற கேள்விக்கு திடமான தெளிவான பதிலை அளிக்கிறார் ஜெயலலிதா.


“லெனினைப் பற்றிச் சொல்வ தென்றால், ஹீ ஈஸ் ஃபெண்டாஸ்டிக். அவருக்கு எப்படி எடுக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். யாருக் காகவும் பயப்படுவதில்லை. நான் ஒரு ஆக்‌ஷன் செய்து அது பிடிக்காவிட்டால், ‘அம்மா எனக்கு இப்படித்தான் வேண்டும்’ என்று சொல்லிவிடுவார். காட்சியில் நடிப்பு எப்படி வரவேண்டும் என்பதும் தெரியும், அதை எப்படிப் பெற வேண்டும் என்பதும் தெரியும்” என்று பதிலளிக்கிறார்.

“ஒரு படம் வெற்றியடைந்தால், அதில் நடித்த முன்னணி நட்சத்திரங்கள்தான் காரணம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்றீர்களா?” அடுத்த கேள்வியைக் கேட்கிறார் செய்தியாளர். இதற்கு அன்று அளித்த பதில், அவர் தன் கலை வாழ்வின் கடைசிப்படம் வரை எப்படி இயக்குநர்களின் நட்சத்திரமாக இருந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. அப்படி என்னதான் அவர் பதில் சொன்னார்!?

“ஒரு படத்தின் வெற்றி தோல்வி இரண்டுக்கும் இயக்குநர்கள்தான் முக்கிய காரணம். புதுமுகங்கள் நடித்த எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பெரிய பெரிய ஸ்டார்கள்.. ஏன் நான் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றனவே. ஒரு படத்தின் உயிர்நாடி கதாசிரியரும், இயக்குநரும்தான். சில படங்கள் இசைக்காவும் ஓடியிருக்கின்றன. இது ஒரு கூட்டு முயற்சி. ஆனால் அஸ்திவாரம்போல அனைத்து திறமைகளையும் ஒருங்கிணைத்து ஒரு படத்தை உருவாக்குபவர் இயக்குநர்தான். அவர்தான் ஒரு படத்துக்கு முகமாக இருப்பாரே தவிர, நட்சத்திரங்கள் அல்ல.”

1961 ல் ‘எபிசில் (Epistle)’ என்ற ஆங்கிலப் படத்தின் வழியாக திரைப் பயணத்தைத் தொடங்கிய செல்வி ஜெயலலிதா பத்தே ஆண்டுகளில் 125 படங்களைக் கடந்து சாதனை படைத்த நிலையில்தான்,அனுபவ பூர்வமாக இந்த பதிலைக் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முகத்தை வலு வான கதைகள் மூலம் நேர்த்தியான கலையாக அடையாளப்படுத்திய தரின் இயக்கத்தில் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஜெ, அந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு அம்மா விடம் ஆசி வாங்கிக் கிளம்புகிறார்.

“ஸ்ரீதரின் படங்களைப் பார்த்து, அவரது ரசிகைகளில் ஒருத்தியாக மாறியிருந்தவள் நான். என் சிறிய தாயார் வித்தியாவுடன் படப்பிடிப்புத் தளத்திற்குள் மேக்கப்புடன் நுழைந் தேன். ஸ்ரீதர் என்னிடம் வந்தார். ‘இந்தப் படத்தில் சித்த சுவாதீனம் இழந்த பெண்ணாக நீ வருகிறாய்’ என்று சொன்னார். முதல் நாள் முதல்காட்சி. நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் தயங்கவும் இல்லை. சரி என்றேன். முதல்நாள் படப்பிடிப்பே குறைவில்லாமல் அமைந்தது என் மனதில் நிறைவை ஏற்படுத்தியது. என் தாயாரிடம் சொன்னேன். ‘உனக்கு ஒரு குறைவும் இருக்காது. விக்னமில்லாமல் தமிழ் படவுலக வாழ்க்கை அமைந்து விட்டது’ என்றார். என் தாயை வணங்கி எழுந்தேன். என் தெய்வம் அவர்தானே. வெண்ணிற ஆடை படத்தில் நான் விதவைக் கோலத்தில் வரும் காட்சியை பார்த்து ரசிகர்கள், ‘இனி விதவைக் கோலத்தில் தோன்றாதீர்கள், எங்களால் தாங்க முடியாது’ என்று கடிதம் எழுதிக் குவித்துவிட்டார்கள்” என்று பின்னாளில் பிஸியாக இருந்த காலத்தில் பிரபல பத்திரிகையில் சுயசரிதை எழுதியபோது குறிப்பிட்டு இருக்கிறார்.

‘வெண்ணிற ஆடை’ படத்தில் அவரை வெள்ளையுடையில் விதவை யாக பார்த்து பரிதாபாபப்பட்ட ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தது அடுத்த ஆண்டே வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில். 80 படங்களில் நடித்து முடித்து சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.ஜி.ஆரின் இணையாக ஒரு அறிமுக நட்சத்திரம் தேர்வு செய்யப்பட்டது சாமான்ய விஷயம் அல்ல.

அழகு, இளமை, திறமை, அதிர்ஷ்டம் என நான்கும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரே நாயகியாக ஜெயலலிதா இருந்தார். அதுமட்டுமல்ல, தயாரிப்பாளருக்கு ‘தலைவலி’ தராத நாயகியாகவும் வலம் வந்த காரணத்தால்தான் ஜெயலலிதா ‘கலைச்செல்வி’யாக கலையுலகில் கடைசிவரை கொண்டாடப்பட்டார்.

‘ஆதிபராசக்தி’ படத்தில் தாய் ஆதிபராசக்தியாக ஜெ தோன்றினார். ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு’ பாடலில் தொடங்கி பல பாடல்களை, இனிமையாகப்பாடி, தன்னையொரு தேர்ச்சி பெற்ற பாடகியாகவும் வெளிப்படுத்தினார். ‘பாட்டும் பரதமும்’ படம் உட்பட பல படங்களில் பாரம்பரிய நடனத்தில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி துறு துறு நாயகியாக வலம் வந்த இந்த இயக்குநர்களின் நட்சத்திரம் இன்று 66 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

அவருக்கு திரையுலகில் ஒரு நிறைவேறாத ஆசையும் உண்டு. அது கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவல் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு அதில் சிவகாமி பாத்திரத்தில் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்பதுதான்.்

முதல்வர் ஜெயலலிதாபிறந்த நாள்தமிழ் திரையுலகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x