Last Updated : 30 Jun, 2017 07:40 PM

 

Published : 30 Jun 2017 07:40 PM
Last Updated : 30 Jun 2017 07:40 PM

ஜிஎஸ்டி வரியோடு நகராட்சி வரியும் விதிப்பு: திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் திரையரங்குகளை மூட முடிவு

ஜிஎஸ்டி வரியோடு தமிழக அரசு நகராட்சி வரியும் விதிக்க முடிவு செய்துள்ளதால் திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் திரையரங்குகளை மூட முடிவு

சினிமா டிக்கெட் விற்பனையில் ஜிஎஸ்டி வரி குறித்து எந்தவொரு தெளிவும் இல்லாத நிலையில், தமிழக அரசு நகராட்சி வரி 30% என்று நேற்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் ஜிஎஸ்டி வரி மற்றும் நகராட்சி வரி என்ற இருவரிகளையும் வைத்துக் கொண்டு எப்படி திரையரங்குகளை நடத்துவது என்று ஆலோசித்தார்கள். இக்கூட்டத்தில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், உபதலைவர் பன்னீர்செல்வம் மற்றும் ஏ.வி.எம். சண்முகம், செல்வின், அருள்பதி, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டம் முடிந்தவுடன் தலைவர் அபிராமி ராமநாதன் பேசியதாவது:

ஜிஎஸ்டி வரி எப்படியெல்லாம் பாதிக்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வரி அனைத்து தரப்பிலும் எப்படி இருக்கப் போகிறது என்பது அமலுக்கு வந்தவுடன் தான் தெரியவரும். எங்களுக்கும் 50 ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி வரியா அல்லது 50 ரூபாய்க்குள் ஜிஎஸ்டி வரியா என்பது தெரியவில்லை. அரசாங்கத்திடம் கேட்டுள்ளோம். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. ஜிஎஸ்டி வரித் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது.

தமிழக அரசும் 30% நகராட்சி வரி உண்டு என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். நகராட்சி வரியோடு, ஜிஎஸ்டி வரியோடு இணைந்தால் மொத்தமாக 58 சதவீதம் வரியாக வந்துவிடும். இந்த வரியை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இதனை பொதுமக்களுக்கு மாற்றிக் கொடுக்க முடியாது. ஏனென்றால் இதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதித்தால் கூட, பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிடும்.

இந்த வரியை நாங்கள் ஏற்றுக் கொண்டால் எங்களால் தொழில் செய்ய முடியாது. நகராட்சி வரிக்கு மேலே தான் ஜிஎஸ்டி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 100 ரூபாயில் அனைத்து வரிகளும் சேர்த்து 62 ரூபாய் போக 38 ரூபாயில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் பங்கிட்டு கொள்ள வேண்டும்.

100 நாட்கள் படம் என்பதே தற்போது இல்லை. அனைத்துமே 25 நாட்கள் மற்றும் 4 நாட்கள் படம் தான். 15 வயதிலிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே தற்போது திரையரங்கிற்கு வருகிறார்கள்.

தமிழக அரசாங்கத்தை நிறைய முறை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். எங்களுடைய தொழிலைக் காப்பாற்றுங்கள், இந்த தொழிலை நம்பி 10 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. அதனை காப்பாற்றுவது அரசாங்கத்துடைய கடமை. எங்களுடைய மனக்குறையை காட்டுவதற்காக திங்கட்கிழமை முதல் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்வதாக அறிவிக்கிறோம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் திரும்பியவுடன், திங்கட்கிழமை முதல் எங்களை அனைத்து காட்சிகளையும் ரத்து செய்யும்படி செய்துவிடாதீர்கள், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறவுள்ளோம். ஏனென்றால், ஒரு காட்சியைக் கூட நாங்கள் இந்த வரியை வைத்து நடத்திவிட்டோம் என்றால், கட்டுப்பட்டு ஆகவேண்டும். ஆகையால் 2 நாட்கள் நேரம் வாங்கியுள்ளோம். எங்களை அரசாங்கம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் நகராட்சி வரி வேண்டாம், ஜிஎஸ்டி வரி போதும் என்ற சட்டமே கொண்டு வந்துவிட்டார்கள். அதையும் தமிழக அரசு பின்பற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

இணையம் வழியாக டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பல்வேறு வரிகளை விதித்துக் கொண்டே இருப்பதால், என்னென்ன வரி வாங்க வேண்டும் என்று எங்களுக்கே தெரியாது. ஆகையால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் அனைத்து இணையம் வழி டிக்கெட் முன்பதிவும் தொடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x