Last Updated : 29 Jun, 2016 02:59 PM

 

Published : 29 Jun 2016 02:59 PM
Last Updated : 29 Jun 2016 02:59 PM

ரெமோ விழா பேச்சு: சிம்பு ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் விளக்கம்

'ரெமோ' விழாவில் சிம்புவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று ரசிகர்கள் எழுப்பிய சர்ச்சைக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்திருக்கிறார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெமோ'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்னேஷ் சிவன் 2 பாடல்களை எழுதியிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய விக்னேஷ் சிவன் "அனிருத் தான் பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுத்தார்" என்று பேசினார்.

'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சிம்பு தான். அவரது பேரைக் குறிப்பிட விட்டாலும் பரவாயில்லை. ஆனால், எப்படி அனிருத் தான் வாய்ப்புக் கொடுத்தார் என பேசலாம் என விக்னேஷ் சிவனை சிம்பு ரசிகர்கள் பலரும் திட்டித் தீர்த்தனர்.

அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் "அனிருத் தான் என்ன பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார் என்று நான் குறிப்பிடவில்லை. அப்படி ஒன்றை பொய்யாக உருவாக்காதீர்கள். எனது கடினமான தருணங்களில் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார் என்றே நான் எப்போதும் கூறிவருகிறேன். சிலம்பரசன் தான் எனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு தந்தார். ஆனால் அதற்குப் பின் என் வாழ்வில் போராட்டமான ஒரு கட்டத்தில் இருந்தேன். அதை கடக்க, சிம்பு சார் உட்பட பலர் எனக்கு உதவி செய்துள்ளனர்.

அச்சமயத்தில் அனிருத் எனக்கு மியூஸிக் வீடியோ வாய்ப்பும், பாடல் எழுத வாய்ப்பும் தந்தார். அது என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வழி செய்தது. தொடர்ந்து தனுஷ் சார் என் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்பை ’நானும் ரவுடி தான்’ படம் மூலம் தந்தார். நான் உழைத்தே இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எனது முழு வாழ்க்கையை சுருக்கமாக சொன்னாலும் அதற்கு 15 நிமிடங்கள் ஆகும். ’ரெமோ’ மேடையில் எனக்கு இருந்தது ஒரு நிமிடமே. அதில் மேடையை சூழ்ந்திருந்த, படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். அது, எனது முதல் படத்திலிருந்து இன்று வரை நடந்தவற்றை சொல்ல சரியான இடம் அல்ல.

நான் கொடுத்த ஒரு சில பேட்டிகளில் எப்போதுமே சிம்பு சாருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். ஆனால் அதை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது எங்கிருந்தோ ஒரு பிரச்சினையை ஏன் கிளப்புகிறார்கள் எனத் தெரியவில்லை.

’ரெமோ’ மேடையில் என் அம்மா அப்பாவைப் பற்றி கூட குறிப்பிட்டதில்லை. ஏனென்றால் அது அதற்கான மேடை அல்ல. உங்களது மீம்களும், கருத்துகளும் தரக்குறைவாக உள்ளன. அவை தேவையற்றது. இந்த மிகையான எதிர்வினையை தயவு செய்து நிறுத்துங்கள். இப்போதுதான் சிம்பு சாருக்கு குறுந்தகவல் அனுப்பி, இதை செய்பவர்களை நிறுத்தச் செய்யுமாறு கோரினேன்.

சிம்பு சாரிடம் எப்போதும் எனக்கு இருந்து வரும் மரியாதையையும், பரஸ்பர நட்பையும் கெடுக்காதீர்கள். அவர் தான் என் சினிமா வாழ்க்கையின் தொடக்கப்புள்ளியாக இருந்தவர், அதை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் குறிப்பிட்டு வருகிறேன். இந்த விஷயத்துக்கு தேவையில்லாத எதிர்வினை வேண்டாம் என அனைத்து தீவிர சிம்பு ரசிகர்களையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சிம்பு தரப்பில் விசாரித்த போது "சிம்பு எப்போதுமே புதியவர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்குவித்து வருபவர் தான். அவரை அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவார். விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பளித்தது சிம்பு தான் என்பது அனைவருக்குமே தெரியும். தேவையில்லாமல் அவரை காயப்படுத்துவது நல்லதல்ல" என்று தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x