Last Updated : 20 Mar, 2014 09:08 AM

 

Published : 20 Mar 2014 09:08 AM
Last Updated : 20 Mar 2014 09:08 AM

‘எத்தனை கோடியில் படம் பண்ணுகிறோம் என்பது முக்கியமல்ல’

‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ படங்களை அடுத்து ‘பப்பாளி’ படத்தின் மூலம் மீண்டும் கல்வியையும், காமெடியையும் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் கோவிந்தமூர்த்தி. படத்தின் வெளியீடு, புரமோஷன் வேலைகளில் தீவிரம் செலுத்திக் கொண்டிருந்தவரை சந்தித்ததிலிருந்து…

‘பப்பாளி’ வழியே புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

இது முழுக்க முழுக்க பாசிடிவ் எனெர்ஜி படம். முந்தைய படமான ‘வெடிகுண்டு முருகேசன்’ பார்த்தவங்க பலரும் நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க. சிலர் சுமாராக இருக்கு என்றார்கள். அந்தப் படம் முழுக்க எதார்த்த மனிதர்களை பதிவு செய்திருந்தேன். அந்த எதார்த்தத்தை சொல்லவும் ஒரு அழகியல் தேவை என்பதை அந்தப்படத்தின் ரிசல்ட் எனக்கு புரிய வைத்தது. ‘பிதாமகன்’ சித்தன் கேரக்டர் அழகியல் இல்லாத ரோல்தான். அதற்கு விக்ரம் என்கிற ஹீரோ இருந்தாரே. அதுதான் எனக்கு அழகியலாக பட்டது. அப்படியான சில புரிதலோடு முதல் பாதியை காமெடியோடும், இரண்டாவது பாடியை கதையோடும் இந்தப் படத்தில் தந்திருக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன்.

கல்வி, குடும்பம் என்று கதையின் களத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். படத்தில் அதை எப்படி பிரதிபலிக்கப் போகிறீர்கள்?

எல்லா காலகட்டத்துக்குமே தேவையான விஷயத்தைத்தான் எடுத்திருக்கிறேன். ஒரு பையனை பார்க்கும்போதெல்லாம் ‘நீ நல்லா வருவப்பா’ என்று பாசிடிவாக மட்டுமே அவனை உத்வேகப்ப டுத்திக்கிட்டே இருந்தால் நிச்சயம் அவன் வெற்றி பெற்றே தீர்வான். அவனுடைய முயற்சி, நம்பிக்கை எல்லாமே அந்த பாசிடிவான உத்வேக சொல்தான். அதற்காக ஏங்கி ஒரு கட்டத்தில் வெற்றியையும் அடையும் சாமான்யன்தான் என் ஹீரோ. இந்த விஷயம் இப்பவும், எப்பவும் தேவைதானே.

சிங்கம்புலி, சரண்யா பொண்வண்ணன், இளவரசு, ஆடுகளம் நரேன் இப்படி பலர் இருக்கிறார்களே?

நாயகன் செந்தில், நாயகி இஷாரா இருவரும் இளைய தலைமுறையின் சேட்டை, காமெடி, காதல் என்று வாழ்ந்திருக்காங்க. இளவரசு வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து வில்லனாக பார்த்து வரும் ‘ஆடுகளம்’ நரேன் இந்தப்படத்தில் நாயகியின் அப்பாவாக வருகிறார். முழுக்க பாசிடிவ் கேரக்டர். என் நண்பன் சிங்கம்புலி இது வரைக்கும் இல்லாத காமெடி கதாபாத்திரத்தில் வருவான். அவ்வளவு அழகான கதாபாத்திரம் அவனுக்கு.

‘நீ எதையாவது சாதிக்க விரும்பினால் திருமணத்திற்கு முன்பே சாதித்துவிடு’ என்று லியோ டால்ஸ்டாய் ஒரு இடத்தில் கூறியிருப்பார். அதை கொஞ்சம் மாற்றி யோசித்து இங்கே திருமணத்திற்கு பின்பும் சாதிக்க வழிகள் இருக்கு என்கிற விஷயத்தை இன்னும் புதுமை கலந்து சொல்லியிருக்கேன்.

இது பட்ஜெட் படம் மாதிரி தெரியுதே? எல்லா விஷயங்களையும் சமரசம் இல்லாமல் அடக்க முடிந்ததா?

பட்ஜெட் படங்கள் பணத்தை பொறுத்துதான் இங்கே தீர்மானிக் கப்படுகின்றன. ஒரு இயக்குநராக நான் என்ன நினைத்தேனோ, அந்த விஷயங்களை கொஞ்சமும் சமரசம் இல்லாமல் கொடுத்திருக்கிறேன். எத்தனை கோடியில் படம் பண்ணுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. எப்படி அழுத்தமான கதையை எடுத்துக்கிருக்கிறோம் என்பதுதான் என் பட்ஜெட் பார்முலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x