Published : 28 Oct 2014 08:42 AM
Last Updated : 28 Oct 2014 10:32 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சிறையிலிருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாள னின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி உத்தரவிட்டது. அவர்கள் உட்பட ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந் திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசா ரணையில் இருந்து வருகிறது. இடைக்கால உத்தரவாக ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த மாநில அரசும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ஆயுள் தண்டனைக்கான காலத்தையும் கடந்து, கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், தன்னை வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 15 ஆண்டுகளில் 2,200 கைதிகள் தண்டனைக் காலம் நிறைவடையும் முன்பே விடுவிக்கப்பட்டிருந்தாலும் நளினி விடுவிக்கப்படவில்லை. அவரது விடுதலைக்கு தடையாக உள்ள சட்டப் பிரிவை ரத்து செய்து விடுவிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் லோக்கூர், ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நளினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ஆயுள் தண்ட னைக் காலத்தையும் தாண்டி நளினி சிறையில் உள்ளார். அவரது விடுதலைக்கு தடையாக உள்ள சட்டப் பிரிவை ரத்து செய்து நளினியை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் நளினியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.