Last Updated : 13 Jun, 2017 01:11 PM

 

Published : 13 Jun 2017 01:11 PM
Last Updated : 13 Jun 2017 01:11 PM

தமிழ்த் திரையுலக பிரச்சினைகளுக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர் சிவா வேண்டுகோள்

தமிழ்த் திரையுலக பிரச்சினைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இவன் தந்திரன்'. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கண்ணன் மற்றும் ராம்பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். தனஞ்ஜெயன் வெளியிடவுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ் முன்னிலையில் தயாரிப்பாளர் தாணு இசையை வெளியிட ஆர்யா பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சிவா பேசியது, "கெளதம் கார்த்திக் நன்றாக வரவேண்டும் என்று நினைக்கும் ஆட்களில் நானும் ஒருவன். ஏனென்றால் அவருடைய அப்பாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். இன்னும் பெரிய வெற்றிகளை அவர் அடைவார் என்று நிச்சயமாக சொல்வேன். அவரைப் போன்ற இளமையான நாயகன், தமிழ் சினிமாவில் தற்போது இல்லை.

தமிழ் சினிமாவின் ஜி.எஸ்.டி வரிக்காக கமல்ஹாசன் உட்பட பலரும் களத்தில் இறங்கி பேசினார்கள். ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் என்று கூறியுள்ளார்கள். கேட்டதற்கு இதாவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

இன்னும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு தென்னிந்திய சினிமா சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தணிக்கையில் பல கெடுபிடிகள் இருக்கின்றன. எதனால் இவ்வளவு வழிமுறைகள் என்று தெரியவில்லை. ஒரு படம் தணிக்கைக்கு விண்ணப்பித்து, தணிக்கையாகி வெளியே வருவது, படம் எடுப்பதைவிட அதிக வலியைக் கொடுக்கிறது. இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

6 மாதத்தில் படத்தின் விளம்பரத்துக்கான செலவும் 3 மடங்கு உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்கள் அனைவருமே அனாதையான மனநிலையில் இருப்பது போன்று உணர்கிறோம். ஜி.எஸ்.டி பிரச்சினைக்காக சென்றால், மத்திய அரசு நம்மை கண்டு கொள்வதில்லை. கடுமையான போராட்டத்துக்கு இடையே தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் தருணத்தில் உங்கள் அனைவரது சார்பிலும் ஒரு வேண்டுகோள். ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்தபோது, நான் இருக்கேன் என்று வந்து ஒட்டுமொத்தமாக சரி செய்து கொடுத்தீர்கள். தற்போது தமிழ் சினிமா அனாதை போல் செத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினி சார்.. ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு சினிமா சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். இப்போது கூட நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் சினிமாவை வாழ வைக்க முடியாது. நீங்கள் சொன்னால் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். மத்திய அரசு திரும்பிப் பார்க்கும். உங்களுடைய வார்த்தைக்கு கட்டுப்படும்" என்று பேசினார் தயாரிப்பாளர் சிவா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x