Last Updated : 15 Apr, 2017 11:29 AM

 

Published : 15 Apr 2017 11:29 AM
Last Updated : 15 Apr 2017 11:29 AM

பெரிய நடிகனாக வருவாய் என்று அன்றே சொன்னார் பாரதிராஜா: கமல்

பெரிய நடிகனாக வருவாய் என்று அன்றே சொன்னார் பாரதிராஜா என்று கமல் தெரிவித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா, 'பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனம்' ஒன்றை சென்னையில் துவங்கியுள்ளார். இதனை ரஜினி, கமல் திறந்து வைத்தார்கள்.

இவ்விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி, ராம், சேரன், சமுத்திரக்கனி, நடிகைகள் ராதா, அம்பிகா, ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் கமல் பேசுகையில் "துணை நடிகனாக இருக்கும் போது உடம்பு சரியில்லாமல் படுத்திருந்தேன். என்னால் படப்பிடிப்பு தாமதப்பட்டு இருந்தது. அப்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். எனது கையைப் பிடித்துக் கொண்டு "உன்னால் முடியுமா?" என்று கேட்டு விட்டு "பெரிய நடிகனாக வரப் போகிறாய். கதைச் சொல்கிறேன் கேள்" என்று ஒரு கதையைச் சொன்னார். அப்போது நானும் உதவி இயக்குநர், அவரும் உதவி இயக்குநர்.

அன்று அவர் சொன்னது நிஜமாக இருக்குமோ என்று எண்ணித்தான் படப்பிடிப்புக்கு எழுந்து போனேன். முதல் முறை இயக்குநராக வந்த போது, நான் படுக்கையில் கேட்ட கதையை மறுபடியும் சொன்னார். இந்தக் கதை எனக்கு தெரியும், நான் நடிக்கிறேன் எனச் சொல்லிவிட்டேன். அது தான் '16 வயதினிலே'.

பாரதிராஜா படம் நன்றாக இயக்கவில்லை என்றால் தான் வியப்பாக பார்ப்பார்கள். நன்றாக செய்திருந்தால் அடுத்து என்று போய்விடுவார்கள். 3 தலைமுறைகளை கண்ட அமுத அறிஞராக இருக்கிறார் பாரதிராஜா. அவரைப் பார்த்து கிராமத்திலிருந்து வந்தவர்களை எல்லாம் நான் திட்டியுள்ளேன். பல பேரிடம் அவர் பயிற்சி பெற்று இயக்குநராக அறிமுகமானார். எப்படி உருவாக்க வேண்டும் என்பதை விட, உருவாக்கும் போது வரும் தடங்கல்களை விட எப்படி தாண்டுவது என்று தெரிந்த தடகள வீரர் பாரதிராஜா.

சினிமா என்பது 200 பேர் இணைந்து செய்யும் ஜனநாயக கலை. அதில் எங்கிருந்து வேண்டுமானாலும் பிழைகள் நேரக்கூடும். அதனால் இயக்குநரை 'Captain of the Ship' என்பார்கள் என நினைக்கிறேன்" என்று பேசினார் கமல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x