Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

விநாயகனே வினை தீர்ப்பவனே! - ஃப்ளாஷ்பேக் தொடர்: இயக்குநர் பாண்டிராஜ்

சென்னையின் பிரபலமான திரையரங்கில் படம் பார்க்க குடும்பத்தோடு போயிருந்தேன். பார்க்கிங் ரசீது முதல் பாப்கார்ன் வாங்குவது வரை எல்லாம் கணினி மயம்தான். படம் போடுவதற்கு சில நிமிடங்கள் முன்பாகவே திரையரங்கம் உள்ளே போய்விட்டேன். நினைவில் அங்கிருந்து எனது ஊருக்கு சென்று விட்டேன. காதுகளில், நினைவின் ஒலிப்பேழையாக ஓடத்தொடங்கியது, “விநாயகனே, வினை தீர்ப்பவனே” பாடல்....

எனது ஊர்தான் ‘பசங்க’ படத்தில் வரும் விராச்சிலை. எங்கள் ஊருக்கு அருகில் நான் படித்த நற்சாந்துபட்டி பள்ளிக்கு அருகிலேயே ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதே போல எங்கள் ஊரில் இருந்து பொன்னமராவதி செல்லும் பாதையில் பனையப்பட்டியில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. நற்சாந்துபட்டி டூரிங் டாக்கீஸின் பெயர் சித்தி விநாயகர் கலையரங்கம். பனையபட்டி டூரிங் டாக்கீஸின் பெயர் மீனாள் கலையரங்கம். நான் படித்த பள்ளிக்கு செல்ல தினசரி, நான் சித்தி விநாயகர் டூரிங் டாக்கீஸை கடந்துதான் போகவேண்டும். அப்போதெல்லாம் சினிமா பார்ப்பது ஒரு அபூர்வமான விஷயம். அடுத்து என்ன படம் வரப்போகிறது என்பதை சொல்லும் ‘வருகிறது’ எனும் போஸ்டர் பார்ப்பதில் அப்படி ஒரு சந்தோஷம். என்ன படம் போடப்போகிறார்கள் என தெரிந்துகொண்ட நாள் முதல் அது வெளியாகும் நாள் வரை ஒரு இனம்புரியாத சந்தோஷமும் பதற்றமும் மனசுக்குள் இருக்கும். அதே மாதிரி ‘இன்று இப்படம் கடைசி’ என்ற போஸ்டரை பார்த்தாலும் எனக்கு அந்த நாள் முடங்கிவிடும். எப்படியாவது அந்தப் படத்தை பார்த்துவிட துடிப்பேன். ஆனால் முடியாது. வேறு வழி இல்லாமல், மனதை தேற்றிக்கொள்வேன்

என்னுடைய அதிகபட்ச இலக்கு, தீபாவளி, பொங்கல், தைப்பூசம் என விசேஷ நாட்களில் வெளியாகும் படங்கள் தான். அப்போது சித்தி விநாயகர் டூரிங் டாக்கீஸுக்கும், மீனாள் டூரிங் டாக்கீஸுக்கும் இடையில் பலத்த போட்டி இருக்கும்.

சித்தி விநாயகரில் ரஜினிகாந்த் ‘தளபதி’ படத்துக்காக “நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நண்பன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? சூர்யானா என்னன்னு தெரியுமா உனக்கு?” என்று பேசிக்கொண்டிருக்கும்போது, மீனாளில் விஜயகாந்த் தேசத்தை காக்க, காஷ்மீர் தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பார். இங்கு விஜய் என்றால் அங்கு அஜித்.

இந்த டூரிங் டாக்கீசில் படம் பார்க்கும் அனுபவத்துக்கு ருசி கூட்டுவதில், இரண்டு திரையரங்கங்களின் அருகில் இருந்த பரோட்டா கடைகளுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. 4 ரூபாய்க்கு முட்டை பரோட்டா கிடைக்கும். நாலு பரோட்டாவை பிய்த்து போட்டு, 2 முட்டையை பொத்துவிட்டு போடும், முட்டை பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க போவது, ஒரு பெரிய கெளரவம். இன்றைக்கெல்லாம் மால்களில் பாப்கார்ன் வாங்கவே கிரெடிட் கார்டில் லோன் வாங்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம், ஒட்டு மொத்த திரையரங்கிற்கும் ஒரே தின்பண்டம் தான். அதற்கு போட்டியே கிடையாது. ஜேசுதாஸ் பேஸ் வாய்ஸில் பேசினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு குரலில், முர்க்கீய்... முர்க்கீய்... மதுரை முர்க்கி.... என்று விற்பார்கள்.

ஆனால் இதில் பெரிய சிக்கல் என்னவென்றால், நான் படம் பார்க்கப் போவதே எனது அப்பாவுக்கு பிடிக்காது. அடி பிடித்தார் என்றால் முதுகில் வார் வாராக பட்டையை உரிச்சிடுவார். எனவே அவருக்கு தெரியாமல், இரவு காட்சி போக நண்பர்களோடு திட்டம் போட்டு அரங்கேற்றுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். இரவு படத்துக்கு போக ஒரு பெரிய சதித் திட்டமே போடவேண்டி வரும். வீட்டில் ஒரு நாய் வளர்த்துக் கொண்டிருந்தோம். இரவு யார் வந்தாலும் அது குரைக்க ஆரம்பித்து விடும். எனது அப்பாவும் வாசலில் கட்டில் போட்டு படுத்திருப்பார். நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் அடுத்த நொடி எழுந்துவிடுவார். அதனால், ஒரு நீளமான சணலை எடுத்து எனது கால் விரலில் கட்டிக் கொண்டு மற்றொரு முனையை வீட்டு வாசலுக்கு வெளியே தெருவை தொடும் இடத்தில் வைத்துவிடுவேன்.

நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் ஜெயச்சந்திரன், வெள்ளச்சாமி மூவரும்தான் கூட்டுகளவாணிகள். அவர்கள் வந்தவுடன் அந்த வாசலில் கிடக்கும் சணலை பிடித்து இழுப்பார்கள். எனது விரலை இழுப்பது தெரிந்தவுடன், நழுவி எழுந்து நாயை தடவிக் கொடுக்க ஆரம்பிப்பேன். மெதுவாக வெளியே சென்று நாய் குரைப்பதற்கு முன்பு சைக்கிளில் ஏறிவிட்டால், அது பெரிய சாதனை. சித்தி விநாயகரை நோக்கி சைக்கிளை மிதிப்போம் ட்ரிபிள்ஸ் போட்டு!

எப்போதுமே, படம் போடும் முன்பு, ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அந்த பாடலை கேட்டாலே முடிவாகிவிடும், இன்னும் சில நிமிடங்களில் படம் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று. அந்த பாடல் ஒலிக்கத்தொடங்கும் முன்பே தியேட்டர் இருக்கும் எல்லையை தொட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு, சைக்கிளை மிதிப்போம். அப்போது ஒரு தரை டிக்கெட் விலை 75 பைசா. பெஞ்சில் அமர்ந்து பார்க்க ஒரு ருபாய் ஐம்பது பைசா. எங்கள் கையில் தரை டிக்கெட் வாங்கத்தான் காசு இருக்கும். இருந்தும் மண்ணை குவித்து, அதை ஒரு நாற்காலியாக நினைத்து மணல் முட்டுகளில் அமர்ந்து படம் பார்த்த நாட்கள், மறக்காது.

என்றாவது ஒருநாள் பெஞ்்சில் அமர்ந்து படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை மனசுக்குள் இருக்கும். ஆனால் தரை டிக்கெட் போல இன்னொரு மடங்கு கொடுப்பதற்கு பதில், அந்த extra 75 பைசாவில் இன்னொரு முறை படம் பார்க்கலாம் என நினைத்துக்கொள்வோம்.

இன்னும் சொல்லப்போனால், அப்போதெல்லாம் பு்ரொஜெக்டரை எட்டிப் பார்ப்பதே, ஒரு மிகப்பெரிய சாகசம் போல. பு்ரொஜெக்டர், வெளியேற்றும் ஒளிகற்றைகளை, கண்கள் விரிய பார்த்தபோது, எனக்கு தெரியாது, என் படங்கள் நாளை புரொஜெக்டரில் வரப்போகிறது என்று. பிலிம் ரோல் சுற்றி வரும் ஸ்ப்ரூலில் இருந்து, வெட்டி வீசப்படும் பிலிம்களை சேகரித்து வைத்து சூரியனை, பார்த்தும், குண்டு பல்பிலும் திரைப்படம் ஒட்டி பார்த்த நாட்கள் அவை!

பள்ளிக்கூடம் மூலமாகவும் இந்த திரையரங்குகளில் சில படங்கள் பார்த்திருக்கிறேன். ஒட்டுமொத்த மாணவர்களையும், ‘கட்டபொம்மன்’, ‘எங்க ளையும் வாழ விடுங்கள்’, ‘வீரசிவாஜி’ போன்ற படங்கள் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாய் மனதில் நிறைந்து கிடக்கிறது. ஒரு பக்கம் மாணவிகள், இன்னொரு பக்கம் மாணவர்கள் என்று அமர வைப்பார்கள். மண்ணை அள்ளி பெண்கள் மேல் வீசி கலாட்டா செய்ய ஒரு தனிப்படையே இருக்கும். அதே போல படத்தை பார்த்துவிட்டு வந்து வகுப்பில் கதை சொல்வதிலும் ஒரு தனி சுகம். ‘கேப்டன் பிரபாகரன்’ படம் பார்த்துவிட்டு வந்து நான் ஆக்ரோஷமாக படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அச்சு பிசகாமல் கதை சொன்னதை இன்றும் என் வகுப்பு தோழர்கள் நினைவுபடுத்துவார்கள். வகுப்பில் போஸ்டர் பார்த்து கதை சொல்வ தற்கென்றும் ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் வேறு நமக்கு டஃப் ஃபைட் கொடுப்பார்கள். அதையும் சமாளிக்க வேண்டும்.

‘வால்டர் வெற்றிவேல்’ படம் பார்த்தபோது, “சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது” என சுகன்யா திரையில் சிணுங்கியபோது, ஒட்டுமொத்த மீனாள் டூரிங் டாக்கீஸும், “கடிக்கட்டும்” என கோரஸ் பாடியதும், ‘முந்தானை முடிச்சு’ படத்தின் இடைவேளை காட்சியில் குழந்தையை போட்டு ஊர்வசி தாண்டப்போகும்போது “அடி சண்டாளி புள்ளைய போட்டு தாண்டுறாளே நீ நல்லா இருப்பீயா?” என பதறித் துடித்த பெரியாயாவும்! ‘இதயம்’ படத்தின் க்ளைமாக்ஸில், தண்ணீர் பாட்டிலுக்குள் கண்ணீர்விட்டு அனுப்பிய முரளியை பார்த்து உடைந்து அழுத 'தாடி' முருகேசன் அண்ணனையும், ‘சின்னத்தம்பி’ படத்தில் மனோரமா ஆச்சிக்கு தாலி கட்டி பழிவாங்க ராதாரவி போடும் திட்டங்களை பார்த்து கண்கலங்கிய மீனாள் அக்காவையும், இந்த டூரிங் டாக்கீஸ்தான் எனக்கு வித்தியாசமாய் காட்டியது.

எங்கள் பள்ளி மாணவர்கள் அடிக்கடி டூரிங் டாக்கீஸில், தென்படுகிறார்கள் என்ற செய்தி பள்ளித் தலைமை ஆசிரியரை எட்டியதும், யூனிஃபார்ம் போட்டு வரும் மாணவர்களுக்கு டிக்கெட் விநியோகிக்க கூடாது என்று ஒரு சர்க்குலர் இரண்டு டூரிங் டாக்கீஸுக்கும் அனுப்பப்பட்டது. எனக்கு தெரிந்து, இன்று வரை, மாணவர்கள் படம் பார்ப்பதை தடுக்க டூரிங் டாக்கீஸுகளுக்கு சர்க்குலர் அனுப்பிய ஒரே தலைமை ஆசிரியர் அவராகத்தான் இருக்கக்கூடும். இந்த சர்க்குலர் நடைமுறைக்கு வந்தபின், எப்போதும் பைக்குள் ஒரு கலர் சட்டை ஒளித்து வைத்திருப்போம். பள்ளிக்கூடத்துக்கு கட் அடித்ததும், சட்டையை மாற்றிவிடுவோம். அடையாளம் தெரியாமல் ஒளிந்து நின்று டிக்கெட் எடுத்து படம் பார்ப்போம். என் நண்பன் வெள்ளைச்சாமிதான், இப்படிப்பட்ட ஒரு சி.பி.ஐ.- க்கே சவால்விடும், ஐடியாவை முன்மொழிந்தான்.

இன்றைக்கு சித்தி விநாயகர் டூரிங் டாக்கீஸும், மீனாள் டூரிங் டாக்கீஸும் இல்லை. இரண்டையும் இழுத்து பூட்டி பல வருடங்கள் ஆகிறது. இன்னும் சொல்லபோனால், இரண்டும் சிதைந்தே போய்விட்டன. அவை இருந்த இடத்தில் கருவேலம் காடுகள் மண்டி கிடக்கிறது. எத்தனை பேருக்கு சந்தோஷம் கொடுத்த திரையரங்குகள் அவை! எத்தனை எத்தனை வெற்றிப்படங்கள்! எத்தனை எத்தனை நினைவுகள்! எல்லாம் அந்த கருவக் காட்டுக்குள் புதைந்து விட்டது, நன்கு வாழ்ந்து செத்துப்பொன மனிதனைப்போல.

இன்று ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்து, இன்னோவா காரில் வந்து இறங்கி, லிப்டில் ஏறி சென்று பஞ்சு மெத்தைக்குள் உடம்பை புதைத்து, ஆரோ 3-டியில் பார்க்கும் படங்கள், எனக்கு சித்தி விநாயகரும், மீனாளும் கொடுத்த பரவசத்தை கொடுப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மண் குவித்து தரை டிக்கெட் வாங்கி படம் பார்த்த நான் எடுக்கும் படம் இன்று உலகின் மூலைகளில் உள்ள ஏதேதோ திரையரங்குகளில் எல்லாம் வெளியாகி ஓடும்போதும், எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் என் படம் ஓடாதே என்ற ஏக்கம் என்னை துரத்திகொண்டுதான் இருக்கிறது.

‘இன்றே இப்படம் கடைசி’ போஸ்டர்கள் உருமாறி, இன்றே இத்திரையரங்கம் கடைசி என சொல்லும் போஸ்டர்கள் காலம் இது. உங்கள் ஊரில் டூரிங் டாக்கீஸ் இருக்கிறதா?

(வரும் ஞாயிறு சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x