Last Updated : 15 Apr, 2017 03:49 PM

 

Published : 15 Apr 2017 03:49 PM
Last Updated : 15 Apr 2017 03:49 PM

விநியோகஸ்தர்களின் முடிவு: பெரிய முதலீட்டு படங்களுக்கு எழுந்தது சிக்கல்

பெரிய முதலீட்டு படங்களின் தமிழக உரிமையை மொத்தமாக வாங்குவதில்லை என்று விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் ஒரு படம் தயாரானவுடன், அப்படத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பைப் பார்த்து தமிழக உரிமையை ஒட்டுமொத்தமாக வேறு ஒரு நிறுவனம் வாங்கி வெளியிடும். அந்த முறைக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 5 கோடிக்கு மேல் தயாராகும் எந்த ஒரு படத்தின் தமிழக உரிமையை வாங்குவதில்லை என்று தீர்மானித்திருக்கிறார்கள். 5 கோடிக்கு மேல் தயாராகும் அனைத்து படங்களும் இனிமேல் தனித்தனி ஏரியாவாரியாக மட்டுமே உரிமையைக் கைப்பற்ற முடியும்.

ஏன் இந்த முடிவு?

சமீப காலமாக பெரிய முதலீட்டில் தயாரான படங்களின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய அனைவருக்கும் நஷ்டமே கிடைத்துள்ளது. மேலும். எம்.ஜி முறையில் வாங்கப்படுவதால் நஷ்டம் ஏற்படும் போது, திரும்ப பணத்தைக் கேட்க முடியாத சூழல் உள்ளது. இது குறித்து விநியோகஸ்தர்கள் சிலரிடம் பேசிய போது, "பெரிய நடிகரின் படங்கள் வாங்கி நஷ்டம் ஏற்பட்டால், அந்த நடிகரோ, தயாரிப்பாளரோ நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்வதில்லை.

விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய முடிவால் இனிமேல் தமிழக உரிமையை மொத்தமாக வாங்க முடியாது. சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை என ஏரியாவாரியாக பிரித்து வாங்கிக் கொள்ள முடியும். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு தான்" என்று தெரிவித்தார்கள்.

இந்த முடிவால் பாதிப்பா?

விநியோகஸ்தர்களின் சங்க முடிவால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். ஏனென்றால் தனித்தனி ஏரியாவாக விற்கும் போது போதிய பணம் உடனடியாக கிடைக்கும் வாய்ப்பு குறைவு. மேலும், நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளர் அனைவருக்குமே பதில் சொல்ல வேண்டும். சிறு படங்கள் கண்டிப்பாக இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும்.

இம்முடிவால் பெரிய நடிகர்கள் அனைவருமே தங்களுடைய படங்களின் வசூல் நிலவரங்கள் உள்ளிட்டவற்றை கொஞ்சம் தெரிந்து கொள்ள முயல்வார்கள் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். 'பாகுபலி 2' படத்தின் தமிழக உரிமையோடு இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளது. அடுத்து வரும் படங்கள் யாவுமே இந்த முடிவை பின்பற்றியாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரிய முதலீட்டு படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், சிறு படங்களுக்கு இந்த முடிவு சாதமாகத் தான் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x