Published : 20 Sep 2018 03:37 PM
Last Updated : 20 Sep 2018 03:37 PM

சூர்யா தயாரிக்கும் புதிய படம்

‘உறியடி’ படத்தின் இரண்டாம் பாகத்தை சூர்யா தயாரிக்கிறார்.

நடிகராக மட்டுமின்றி, சிறந்த தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் சூர்யா. தன்னுடைய குழந்தைகள் தேவ், தியா இருவரின் பெயரையும் இணைந்து ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அத்துடன், இசைக்காக ‘2டி மியூஸிக்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஜோதிகா ரீஎன்ட்ரியான ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் தயாரிப்பைத் தொடங்கிய சூர்யா, தொடர்ந்து ‘பசங்க 2’, ‘24’, ‘மகளிர் மட்டும்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களைத் தயாரித்தார். அதில், ‘கடைக்குட்டி சிங்கம்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

இந்நிலையில், ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘உறியடி’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கிறார் சூர்யா. முதல் பாகத்தை இயக்கி, நடித்த விஜய்குமார், இரண்டாம் பாகத்தையும் இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். அத்துடன், சோவ்னீர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார் விஜய்குமார்.

கேராளாவைச் சேர்ந்த விஸ்மயா, இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர், முதல் பாகத்தில் நடித்த ஷங்கர் தாஸ், அப்பாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்துள்ள ‘96’ படத்துக்கு இசையமைத்திருக்கும் கோவிந்த் மேனன், இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. குற்றாலம், தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. சமூகக் கருத்துடன், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இது உருவாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x