Published : 28 Sep 2018 11:52 AM
Last Updated : 28 Sep 2018 11:52 AM

மீம்ஸ் எதிரொலி: தமிழ் சினிமாவில் இருந்து நீக்கப்படும் காட்சிகள்

மீம்ஸ் எதிரொலியால், தமிழ் சினிமாவில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டு வருகின்றன.

முன்பெல்லாம் பத்திரிகைகள், டிவி, வானொலியில் மட்டுமே சினிமா விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. சமூக வலைதளங்களின் தாக்கத்தால், தற்போது எல்லாவற்றிலும் விமர்சனம் செய்யும் போக்கு அதிகரித்துவிட்டது. இதனால், ஊடகங்கள் மட்டுமின்றி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.

தான் நினைத்த விஷயத்தைப் பதிவுசெய்யும் கருத்து சுதந்திரம் இது என்று வரவேற்கப்பட்டாலும், தனக்குப் பிடிக்காதவர்களை வேண்டுமென்றே மட்டும் தட்டும் அபாயமும் இதில் இருக்கிறது. சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படத்துக்கு, சமூக வலைதள விமர்சனங்களால் பாதிப்பு ஏற்பட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையையே சொல்லிவிடும் ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால், படத்தின் குறைகளை, நகைச்சுவையுடன் மீம்ஸாகவோ, வீடியோவாகவோ ட்ரால் செய்யும்போது, அதற்கு சினிமா ஆட்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகக் கருதுகின்றனர் மீம் கிரியேட்டர்கள். ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை எனும்போது, அதை மாற்றிக் கொள்ளவும் தமிழ் சினிமா தயாராக இருக்கிறது என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சாமி ஸ்கொயர்’ படம் சமீபத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தின் ட்ரெய்லரில், ‘நான் தாய் வயித்துல பொறக்கல, பேய் வயித்துல பொறந்தேன்...’, ‘நான் சாமி இல்ல, பூதம்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வசனங்கள் பயங்கரமாக ட்ரால் செய்யப்பட்டன.

இரண்டாவது ட்ரெய்லரிலேயே இந்தத் தவறைப் படக்குழுவினர் திருத்திக் கொண்டனர். முதல் பாகத்தில் இடம்பெற்ற வசனங்களே இரண்டாவது ட்ரெய்லரில் இடம்பெற்றன. மேலும், படத்திலும் ட்ரால் செய்யப்பட்டக் காட்சிகள் இடம்பெறவில்லை.

அதேபோல, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ட்ரெய்லரில், ‘அப்போ... யுத்தம் தான், முடிவு பண்ணிட்டீங்கள்ல..?’ என்று அரவிந்த் சாமியிடம் ஜோதிகா சொல்வது போல ஒரு காட்சி இடம்பெற்றது. இதுவும் ட்ரால் செய்யப்பட்டது.

ஆனால், இந்தக் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. இதையும் தங்களுக்கான வெற்றியாகப் பார்க்கிறார்கள் மீம் கிரியேட்டர்கள். ரசிகர்களின் கருத்தையும் தமிழ் சினிமா இயக்குநர்கள் கருத்தில் கொள்வது ஆரோக்கியமான விஷயமாகவே கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x