Published : 15 Sep 2018 05:50 PM
Last Updated : 15 Sep 2018 05:50 PM

‘2.0’ Vs ‘சர்கார்’: நவம்பர் மாதத்தில் ஏற்றம் பெறுமா தமிழ்த் திரையுலகம்?

நவம்பர் மாதத்தில் ‘2.0’ மற்றும் ‘சர்கார்’ என இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக இருப்பதால், தமிழ்த் திரையுலகம் ஏற்றம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்படியானால், தமிழ் சினிமாவில் பணம் போடுபவர்களின் பொருளாதார நிலையும் நன்றாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லை என்பதுதான் உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை.

2500 திரையரங்குகள் இருந்த தமிழகத்தில், இன்றைக்கு 1200 திரையரங்குகள் மட்டுமே உள்ளன என்பதே தமிழ் சினிமா எவ்வளவு பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பதற்கு சாட்சி. படங்களின் தயாரிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும், பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும், பைரசியைத் தடுக்க வேண்டும் என ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தால் தான் தமிழ் சினிமா பொருளாதார ரீதியாகவும் தலைநிமிர முடியும்.

இந்த வருடம் முடிய இன்னும் மூன்று மாதங்களே மீதமிருக்கின்றன. இதுவரை வெளியான படங்களில், சுந்தர்.சி இயக்கிய ‘கலகலப்பு 2’, அடல்ட் காமெடிப் படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஷாலின் ‘இரும்புத்திரை’, ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, சி.எஸ்.அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’, கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’, யுவன் சங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’, நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ என 8 படங்கள் மட்டுமே இந்த வருடம் லாபம் தந்ததாகச் சொல்கிறார்கள்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படமும் நல்ல வசூல் என்கிறார்கள். மூன்றாவது வாரமாக அந்தப் படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருப்பதால், இன்னும் சரியான கணக்கு கிடைக்கவில்லை.

ஆக, ஏறக்குறைய 120 படங்களுக்கு மேல் ரிலீஸான நிலையில், 8 படங்கள் மட்டுமே வெற்றியைக் கொடுத்திருப்பதால், தமிழ் சினிமாவின் எதிர்காலமும், அதை நம்பியிருப்பவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. மீதமிருக்கிற 3 மாதங்களில் வெளியாகும் படங்களில், எத்தனைப் படங்கள் வெற்றி பெறும் என்றும் சொல்ல முடியாது.

எனவே, நவம்பர் மாதத்தை மட்டுமே எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் சினிமா விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும். காரணம், இந்த மாதத்தில் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கக்கூடிய ‘சர்கார்’ மற்றும் ‘2.0’ படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. தீபாவளிக்குப் படம் ரிலீஸாக இருக்கிறது. கடந்த வருட தீபாவளிக்கு விஜய்யின் ‘மெர்சல்’ வெளியானது. ஒரு வருடத்துக்குப் பின் ‘சர்கார்’ ரிலீஸாக இருப்பதால், அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள ‘2.0’, கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டை விழுங்கியிருக்கிறது. கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே கிட்டத்தட்ட 543 கோடி ரூபாயைச் செலவழித்துள்ளார் ஷங்கர். ரஜினி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

‘2.0’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீடு கடந்த வருடமே துபாயில் நடைபெற்றது. கடந்த வருடமே படமும் ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்த இரண்டும்தான் இந்த வருடத்தின் ஆகப்பெரிய பட்ஜெட் படங்கள். மற்ற மொழிகளிலும் இந்தப் படங்கள் வெளியாகும் என்பதால், வசூலுக்கு குறைவிருக்காது. எனவே, மற்றப் படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை, இந்தப் படங்களில் இருந்து ஈடுகட்டிக் கொள்ளலாம் என்ற கனவுடன் காத்திருக்கின்றனர் விநியோகதஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும். அவர்களின் கனவு நிறைவேறுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x