Published : 27 Sep 2018 02:02 PM
Last Updated : 27 Sep 2018 02:02 PM

கோவா ரிசார்ட்டில் பிறந்த மழை குருவி; பாடல்களை கையாள்வதில் வல்லவர் மணிரத்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பேட்டி

மணிரத்னத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் 14-வது படம் 'செக்கச் சிவந்த வானம்'. அவருடனான 26 ஆண்டுகள் பயணத்தையும், அதன் அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ரஹ்மான்.

''உலகம் முழுவதும் குறிப்பிட்ட சில இயக்குநர்கள், தொடர்ந்து குறிப்பிட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். 80-களில் இருந்த ஜான் வில்லியம்ஸ் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் தொடர்ந்து பல வருடங்கள், ஏராளமான படங்களில் பணியாற்றினார். இத்தகைய இணைப்புக்கு எங்களிடையே உள்ள பரஸ்பர மரியாதைதான் காரணம்'' என்கிறார் தனக்கே உரித்தான சிரிப்புடன்.

'நாயகன்' நாட்கள்

'செக்கச் சிவந்த வானம் 'இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஹ்மான், 'நாயகன்' நாட்களுகே மணிரத்னம் சென்றுவிட்டார் என்றார். அதுகுறித்துப் பேசியவர், ''கடந்த காலங்களில் அவர் மேற்கொண்ட படங்களில் இருந்து இந்தப் படம் முற்றிலும் வித்தியாசப்பட்டிருக்கும்.

அவரின் படைப்பு ஆக்கத்தையும், எழுச்சியையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்க முடியுமோ அதை இசை வழியாக அளித்திருக்கிறேன்.

படத்தின் கதை பற்றியோ, மற்ற தகவல்களையோ என்னால் கூற முடியாது. அதே நேரம் ஒன்றை மட்டும் என்னால் பகிர முடியும். படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் சமகாலத்திய வகையில் இரண்டு கூடுதல் பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டேன்.

மணி சார் கோவாவில் உள்ள ரிசார்ட்டுக்குத் திடீரென என்னை அழைத்துச் சென்றார். அங்கே இணையத் தொடர்பு அறவே இல்லை. கடல் மட்டுமே எங்களுடன் தொடர்பில் இருந்தது. அது அத்தனை அழகாய் இருந்தது.

ரிசார்ட்டில் பிறந்த 'மழை குருவி' பாடல்

இரண்டு நாட்களுக்குள் 10 வித இசைக் கோர்வையை உருவாக்கி, மணி சாரிடம் காண்பித்தேன். இதில் பிடித்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னேன். அதில் ஒன்றுதான் 'மழை குருவி'.

அதற்கு வைரமுத்துவின் கவிதையில் ஒன்று பொருத்தமாக இருக்கும் என்று மணி சார் நினைத்தார். அதை வித்தியாசமாகப் பயன்படுத்தினார். சொல்லப்போனால் படத்தில் அவர் பாடல்களைப் பயன்படுத்தும் விதம் என்னைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று.

ஒரே பாணி இசையைக் கேட்கும் இயக்குநர்கள்

சில இயக்குநர்கள் என்னிடமிருந்து புதியவற்றை எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்கள் ஏற்கெனவே முயற்சித்த பாணி இசையையே கேட்கிறார்கள். ஒரு பாடல் சூப்பர்ஹிட் ஆகும்போது அதே பாணியில் இசையமைக்கச் சொல்கின்றனர். ஆனால் நான் அதைச் செய்வதில்லை'' என்கிறார்.

தன்னுடைய சில பாடல்களுக்குக் கலவையான விமர்சனங்கள் எழுவது குறித்து ரஹ்மானுக்குத் தெரிந்திருக்கிறது. அதுகுறித்தும் பேசுபவர், ''எப்போதும் நாங்கள்(இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், கொரியோகிராபர்) எங்களையே சுயபரிசோதனை செய்துகொள்கிறோம்.

சில நேரங்களில் கலவையான விமர்சனங்கள் கிடைக்கின்றன. அனுபவத்தின் காரணமாக பெரும்பாலான நேரங்களில் இசை பாராட்டப்படுமா, விமர்சிக்கப்படுமா என்பதைக் கணித்துவிடுவேன். சில நேரங்களில் எதிர்பாராததும் நடந்துவிடும்'' என்று சிரிக்கிறார் ரஹ்மான்.

மணிரத்னத்துடனான நட்பு, சந்திப்பு குறித்தும் பேசியவர், ''இருவருமே பிஸியாக இருப்போம் என்பதால் வேலை தவிர்த்து அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் எப்போதாவது என் மனைவியும் ஹாசினி மேடமும் பேசிக் கொள்வார்கள்'' என்கிறார்.

தெலுங்கு சினிமாவில் இசையமைப்பது குறித்துத் தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், ''ஏராளமான விஷயங்கள் இதில் இருக்கின்றன. தனித்துவமான கதை வரும்போது தெலுங்கு சினிமாவில் வேலை பார்க்கத் தயாராக இருக்கிறேன். தெலுங்கு ஓர் இனிமையான மொழி. அங்கே கே.விஸ்வநாத், ராகவேந்திர ராவ் மற்றும் ராஜமெளலியின் தனித்துவத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்.

அதே நேரம் டப்பிங் படங்களில் வேலை பார்க்கும்போது, ஒரிஜினல் படங்களுக்கு அளிக்கும் உழைப்பை அதற்கும் கொடுக்கிறேன்'' என்று புன்னகைக்கிறார் ரஹ்மான்.

இசை வழிந்தோடுகிறது அங்கே...!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x