Published : 17 Jun 2019 10:09 PM
Last Updated : 17 Jun 2019 10:09 PM

நடிகர் சங்கத் தேர்தல் என்பது வீண் வேலை: கார்த்தி

நடிகர் சங்கத் தேர்தல் என்பது வீண் வேலை, அவசியமே இல்லாத விஷயம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தேர்தல், வருகிற 23-ம் தேதி எம்.ஜி.ஆர். ஜானகி மகளில் கல்லூரியில் நடைபெற உள்ளது. கடந்த முறை வெற்றிபெற்ற நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட ‘பாண்டவர் அணி’யும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ் அணி’யும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

எனவே, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நாடக நடிகர்களைச் சந்தித்து இவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி, சேலத்தில் இன்று (ஜூன் 17) நாடக நடிகர்களைச் சந்தித்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் நடிகர் கார்த்தி.

அப்போது அவர் பேசியதாவது:

“இந்த நடிகர் சங்கத் தேர்தல் என்பது எவ்வளவு பெரிய வீண் வேலை என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் ஓட்டு கேட்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறோம். கட்டிடத்துக்கு வேலை செய்யாமல், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். இது அவசியமே இல்லாத ஒரு விஷயம்.

ஒரு சங்கத்துக்குள் சுலபமாகப் பேசிக்கொண்டு, அந்த சங்கத்தின் நலனுக்காகப் போராடுவோமா? நான் பெரிய ஆள், நான் ஜெயிச்சிக் காட்டுறேன் எனப் போராடுவோமா? இங்கு நம்முடைய உழைப்பு எதைச் சார்ந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி. நியாயமாக இருந்தால் இந்தத் தேர்தலே நடக்கக்கூடாது. கட்டிடம் கட்டி முடிக்கும்வரை எல்லோரும் சுமுகமாக இருந்து அந்த வேலையைப் பார்த்திருக்க வேண்டும்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் கார்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x