Published : 19 Jun 2019 05:11 PM
Last Updated : 19 Jun 2019 05:11 PM

பார்ட் - 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது: இயக்குநர் சுசீந்திரன்

ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. விக்ராந்த், இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். சுசீந்திரன் முதன்முறையாக நடித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தன்னை நடிகராக்கிய ராம்பிரகாஷ் ராயப்பாவுக்கு, தங்கச் சங்கிலி பரிசளித்து தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தன்னுடைய எதிர்காலத் திட்டம் குறித்து சுசீந்திரன் தெரிவித்திருப்பதாவது:

“ ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில், நான் நடித்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என முதலில் விவாதம் எழுந்தபோது, மிஷ்கின் எனது பெயரைக் கூறியுள்ளார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்புகொண்டு நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறியதும், வழக்கமானதாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில், ஓடுவது மட்டுமே எனக்கு சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் சொல்வதைச் செய்ய வேண்டுமென்ற மனநிலையோடு சென்றதால் நடித்து முடித்தேன்.

முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தினர், நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தனர். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

என்னைப் பொறுத்தவரை, எதைச் செய்தாலும் அதில் உச்சத்திற்கு சென்ற பின்புதான் அடுத்த வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அப்படிப் பார்த்தால், இயக்குநராக நான் இன்னும் உச்சம் தொடவில்லை. அதன் பிறகுதான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். அதற்கிடையில், இதுபோல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அது 10 நிமிட கதாபாத்திரமாக இருந்தாலும்கூட.

‘கென்னடி கிளப்’, ‘ஏஞ்சலினா’ ஆகிய இரண்டு படங்களில், எந்தப் படம் முதலில் வெளியாகும் என்று தெரியவில்லை. அதற்குப்பின் ‘சாம்பியன்’ படம் வெளியாகும். ‘ஏஞ்சலினா’ படம், இக்கால இளைஞர்களுக்கான த்ரில்லர் படமாக இருக்கும். இந்தத் தலைமுறையினரிடம் நடக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன். குறிப்பாக, பெண்கள் பயத்துடன் இருப்பதால்தான் தோல்வியடைகின்றனர். அவர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உலகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறேன். இதில், பொள்ளாச்சி சம்பவமும் இடம்பெறும்.

இரண்டாவது பாகம் எடுப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது. ஏனென்றால், முதல் பாகத்தின் வெற்றிக்குப்பிறகு இரண்டாவது பாகம் எழுதுவதால், அதே சாயலில் வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு எழுதும்போது, அது சரியாக அமைவதில்லை. எழுதும்போதே இரண்டு பாகத்தையும் எழுதினால்தான் வெற்றிபெறும். அப்படி எழுதி வெற்றியடைந்த படம்தான் ‘பாகுபலி’.

‘வில் அம்பு’ படத்தின் இயக்குநர் என் நண்பர் என்பதால், அப்படத்தைத் தயாரித்தேன். மற்றபடி தயாரிக்கும் எண்ணமில்லை.”

இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x