Published : 10 Jun 2019 03:13 PM
Last Updated : 10 Jun 2019 03:13 PM

கிரிஷ் கர்னாட் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர், கமல்ஹாசன் இரங்கல்

கிரிஷ் கர்னாட் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் மற்றும் நாடக, திரைப்படக் கலைஞருமான கிரிஷ் கர்னாட் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.

கிரிஷ் கர்னாட் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர்

கிரிஷ் கர்னாட் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ‘‘கிரிஷ் கர்னாட் மறைவு குறித்த செய்தி ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறந்த எழுத்தாளர், நடிகர், இந்திய நாடக உலகின் தலைவர் அவர். நமது கலாச்சார உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு என ஆழந்த இரங்கல்’’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

இதுபோலவே பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் ‘‘கிரிஷ் கர்னாட் அனைத்து தளங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நீங்கா இடம் பெற்றவர். அன்பானவர், எல்லோரிடமும் நேர்மறையாக பேசக்கூடியவர். அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘கிரிஷ் கர்னாட்டின் எழுத்துகள் எனக்கு பிரமிப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தின. பல எழுத்தாளர்களையும் தனது ரசிகர்களாக்கியவர். அவரது பணிகள் ஈடு செய்ய முடியாவை; அவரது மறைவு பேரிழப்பு’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கிரிஷ் கர்னாட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x