Published : 26 Jun 2019 12:07 PM
Last Updated : 26 Jun 2019 12:07 PM

ஹாலிவுட் படத்தில் நடித்தது, பள்ளிப்படிப்பைப் போல இருந்தது: தனுஷ்

ஹாலிவுட் படத்தில் நடித்தது, பள்ளிப்படிப்பைப் போல இருந்தது. புதிதாகக் கற்றுக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் கடந்த 21-ம் தேதி ரிலீஸான படம் ‘பக்கிரி’. கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் இது. தமிழ் மட்டுமின்றி, இன்னும் சில இந்திய மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸாகி இருக்கிறது.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘முதல் ஹாலிவுட் படம் வண்ணமயமானதாக, மகிழ்ச்சியான படமாக இருக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டீர்களா?’ என்ற கேள்விக்கு, “நான் திட்டமிட்டிருந்தால் என் வாழ்க்கை இவ்வளவு வெற்றிகரமாக இருந்திருக்காது. ‘ராஞ்சனா’, ‘பக்கிரி’ எல்லாம் தானாக நடந்த விஷயங்கள். சரியான நபர்களை, சரியான நேரத்தில் சந்தித்தேன்.

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, அங்கு நடிப்பு முறை வித்தியாசமானது. ஒரு விஷயத்தை பலமுறை அப்படியே பிசகாமல் செய்வதுதான் அங்கிருந்த மிகப்பெரிய சவால். நான் ஒவ்வொரு டேக்கிலும் ஒரே விஷயத்தை வெவ்வேறு மாதிரி நடிப்பவன். இது எனக்கு பள்ளிப்படிப்பைப் போல இருந்தது. இம்முறை நான் நடிப்பு குறித்து கற்ற பல விஷயங்களை மறக்க வேண்டியிருந்தது. புதிதாகக் கற்றுக்கொண்டேன்” எனப் பதில் அளித்துள்ளார் தனுஷ்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அப்பா - மகன் என இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் தனுஷ், அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

தொடர்ந்து, ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்திப் படம், ‘ராட்சசன்’ இயக்குநர் படம் என அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x