Published : 10 Jun 2019 09:10 AM
Last Updated : 10 Jun 2019 09:10 AM

களைகட்டுகிறது நடிகர் சங்கத் தேர்தல்: நாசரின் பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையிலான புதிய அணி வேட்புமனு - ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என்ற பெயருடன் களமிறங்கினர்

நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கு எதிராக இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் அணிக்கு ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த அணியினர் நேற்று வேட்புமனு தாக்கல் செய் தனர்.

2019-22 ஆண்டுக்கான தென்னிந் திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்க உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார்.

இதில், நாசர் தலைமையில் போட்டியிட உள்ள ‘பாண்டவர் அணி’ யினரின் முழு விவரம் சமீபத்தில் வெளியானது. அவர்களில் பலரும் கடந்த முறை இதே பதவிகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். அந்த அணியில் விஷால் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணிக்கு ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் செயல்பட்டு வரும் நடிகர் சங்க அலுவலகத்துக்கு இந்த அணியைச் சேர்ந்த அனைவரும் நேற்று ஒரே பேருந்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கார்த்தியை எதிர்த்து பிரசாந்த்

தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கே.கணேஷ், துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் உதயா, நடிகை குட்டி பத்மினி, பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பூர்ணிமா பாக்யராஜ், கே.ராஜன், ஆர்த்தி கணேஷ், விமல், நிதின் சத்யா, சங்கீதா, காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், ஸ்ரீகாந்த், சிவகாமி, ரஞ்சனி, அயூப்கான் உள்ளிட்டோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பின்னர், அவர்கள் கூறியதாவது:

பாக்யராஜ்: ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் ஆலோசித்த பிறகே இத்தேர்தலில் போட்டியிடுகிறோம். ‘நீங்கள் தலைவரானால் நன்றாக இருக்கும்’ என்று கூறி ரஜினி வாழ்த்தினார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டு வதற்கு, ஆரம்பத்தில் இருந்து ஐசரி கணேஷ்தான் பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்தார். பாதி கட்டிடம் முடிந்த நிலையில், வேலைகள் அப்படியே நின்றுவிட் டன. கிடப்பில் போடப்பட்ட பணி களை மீண்டும் தொடங்கி, கட்டி டத்தை கட்டி முடிக்கும் பணியில் எங்களது சுவாமி சங்கரதாஸ் அணி முழுவீச்சில் ஈடுபடும்.

பாண்டவர் அணி மீதான அதிருப்தியால் பலர் அங்கிருந்து வந்து எங்கள் அணியில் சேர்ந் துள்ளனர்.

எங்கள் அணியின் செயல் பாட்டில் அரசியல் இல்லை, அரசியல் இருந்தால் நானே போட்டியிட மாட்டேன்.

ஐசரி கணேஷ்: இந்த நடிகர் சங்கத்தை உருவாக்கி, ஆசீர்வாதம் செய்த சங்கர தாஸ் சுவாமிகளின் பெயரைத்தான் எங்கள் அணிக்கு வைத்துள்ளோம். இதுதான் வெற்றிபெறும் அணி. பாண்டவர் அணியில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய உதயா, சங்கீதா, நிதின் சத்யா ஆகியோர், ‘‘பின்னால் இருந்து நிறைய நல்லது செய்கிறீர்கள். அதை நீங்கள் ஏன் முன்னின்று செய்யக் கூடாது’’ என்று கேட்டனர். அதனால்தான் சங்கப் பொறுப்புக்கு தலைமை ஏற்க வந்தேன்.

இந்த கட்டிடத்தை கட்டி முடித் தால் நிறைய நாடக கலைஞர் களுக்கு உதவியாக இருக்கும். ‘நாங்கள் பொறுப்புக்கு வந்தால் 6 மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்’ என்று கூறிய பாண்டவர் அணியினர் மிக மிக மெத்தனமாக செயல்படுகின்றனர். ஒன்றரை ஆண்டாக கட்டிட வேலை நடக்காமல் அப்படியே நிற்கிறது. கட்டிடத்தை முடிக்க இன்னும் ரூ.22 கோடி தேவை. அதற்கு பாண்டவர் அணியினர் என்ன திட்டம் வைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை.

நல்ல ஒரு அணியை உருவாக்கி உள்ளோம். நிச்சயம் வெற்றி பெற்று சங்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடிகர்கள் அருண் பாண்டியன், பாபு கணேஷ், சாந்தனு, ஆரி, விஜய் கார்த்திக், வருண், விஜித் ஆகியோர் நேரில் வந்து, சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நாசர் மனுதாக்கல்

பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜய்ரத்தினம், சிபிராஜ் ஆகியோர் நேற்று தேர் தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டி யிடும் நடிகர் கார்த்தியின் வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் நாசர் கூறியதாவது:

நாங்கள் கடந்த 3 ஆண்டுகாலம் செய்த பணிகளை சாட்சியாக நிறுத்தி, போட்டியிடுகிறோம். சங்க உறுப்பினர்களின் மிகப் பெரிய ஆதரவு பாண்டவர் அணிக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

அரசியல் தலையீடு இல்லை

இந்த தேர்தலில் அரசியல் தலை யீடு என்பது அறவே கிடையாது. இன்றைய சூழலில் அரசுக்கு இதைவிட பெரிய பொறுப்புகள், வேலைகள், கடமைகள் இருக்கின் றன. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்தச் சிறு அமைப்பின் பணியில் குறுக்கிடுவார்கள் என்று கருதத் தேவையில்லை. இதில் அரசு அல்லது கட்சிகளின் தலையீடு சுத்தமாக கிடையாது. எப்போதும் போல இந்த அமைப்பு மத, அரசி யல் பாகுபாடுகளின்றி செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை முன்மொழிந்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x