Last Updated : 03 Jun, 2019 12:20 PM

 

Published : 03 Jun 2019 12:20 PM
Last Updated : 03 Jun 2019 12:20 PM

ஏன்யா சார்னு கூப்பிடுறே? நீ கம்யூனிஸ்ட்தானே?’’ - இயக்குநர் மணிவண்ணனிடம் கலைஞர் கிண்டல்

‘’ஏன்யா சார்னு கூப்பிடுறே? நீ கம்யூனிஸ்ட்தானே?’’ என்று கலைஞர் கருணாநிதி, இயக்குநர் மணிவண்ணனிடம் கிண்டலாகக் கேட்டார். இதை ஓர் விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன்.

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் பெயரில், விருதுகள் வழங்கும் விழா கோவையில் ஒருமுறை நடைபெற்றது.

அப்போது இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது:

கலைஞர் அவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூம்புகார் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், ‘பாலைவன ரோஜாக்கள்’ படம் எடுக்கத் திட்டமிட்டார். அந்தப் படத்தை இயக்குவதற்கு இயக்குநர் மணிவண்ணனே பொருத்தமாக இருப்பார் என்று கலைஞர் எண்ணினார். அதன்படி, மணிவண்ணனுக்கு தகவல் தெரிவித்து வரச்சொன்னார்.

மணிவண்ணனுக்கு, கலைஞரை சந்தித்ததும் எப்படி அழைப்பது என்பதில் குழப்பம். மணிவண்ணனோ கம்யூனிஸ்ட். எல்லோரையும் அழைப்பது போல் ‘தோழர்’ என்று கலைஞரை அழைக்கமுடியாது. அதேபோல், கலைஞரை எல்லோரும் ’தலைவர்’ என்றுதான் அழைப்பார்கள். அப்படியும் கூப்பிட முடியாது. ஒருசிலர் ‘ஐயா’ என்று அழைப்பார்கள். அப்படிக் கூப்பிடுவதும் நன்றாக இருக்காது என்றெல்லாம் யோசித்துக்கொண்டே கலைஞரைச் சந்தித்தார் மணிவண்ணன்.

படத்தின் கதையை விவரமாகச் சொன்னார் கலைஞர். உடனே மணிவண்ணன், ‘நல்லாருக்கு சார் கதை. சிறப்பா பண்ணிடலாம் சார். வெற்றிப்படமா ஆக்கிடலாம் சார்’ என்று வார்த்தைக்கு வார்த்தை ‘சார்’ போட்டுப் பேசினார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த கலைஞர், ‘என்னய்யா சார் சார்னு கூப்பிடுறே? நீ கம்யூனிஸ்ட்டுதானே? இப்படியாக் கூப்புடுறது?’ என்று சொல்ல, மணிவண்ணனின் இறுக்கமெல்லாம் தளர்ந்தது. இதை மணிவண்ணன் பலமுறை சொல்லிச் சொல்லி வியந்திருக்கிறார்.

மணிவண்ணன் சிறந்த இயக்குநர் என்பதை மட்டும் கலைஞர் அறிந்திருக்கவில்லை. கம்யூனிஸக் கொள்கைகள் கொண்டவர் என்பதையும் கலைஞர் அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் அவரின் கொள்கையை உணர்ந்து, கலைஞர் பேசினார்.

இவ்வாறு கரு.பழனியப்பன் பேசினார்.  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x