Published : 11 Jun 2019 13:49 pm

Updated : 11 Jun 2019 13:55 pm

 

Published : 11 Jun 2019 01:49 PM
Last Updated : 11 Jun 2019 01:55 PM

இது டான்ஸ் ஷோ இல்ல... கேம் ஷோ!

உ.சந்தானலெட்சுமி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘பேட்ட ராப்’ நிகழ்ச்சி முன்னோட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தக்கவைத்து, அதே ஆட்டமும் பாட்டுமாய் 10 எபிசோடுகளைக் கடந்து துள்ளலுடன் செல்கிறது.


இந்த நிகழ்ச்சியின் இளமை புதுமை பரவசத்துக்குக் காரணமாக இருக்கும் ஷோவின் தொகுப்பாளர்கள் தீபக், மகேஸ்வரியுடன் கலாய்ப்பாக ஒரு சாட்டிங்! கையில் கிடார், மைக் சகிதமாகவே பேச ஆரம்பிக்கிறது ஜோடி.

“ஏதாவது வித்தியாசமான கேம் ஷோ பண்ணலாம்னு கிரியேட்டிவ் டீம்ல ப்ளான் பண்ணிட்டு இருந்தப்பதான், இந்த ‘பேட்ட ராப்’ ஐடியா தோணுச்சு. எல்லாருமே, ஷோ டைட்டில் கேட்டுட்டு இது ஏதோ, டான்ஸ் ஷோன்னுதான் நெனைச்சாங்க. கரெக்ட்டா, ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸை பிடிச்சு, படார்னு ப்ரொமோவைப் போட்டு பாட்டு ஷோன்னு பல்பு எரிய வைச்சோம்” என்று தீபக் சொல்ல, “இந்த ஷோவை செலிபிரிட்டிகளைப் பாட வச்சு பண்றோம். வழக்கமா, பிரபலங்களை வச்சு டான்ஸ் ஆடுறது, அவங்க திறமைகளைக் காட்டுற மாதிரிதான் ஷோ வந்திருக்கு. இது ரொம்பவே புதுசு. ராகம் வச்சு பாடுறதெல்லாம் இல்லை. விளையாட வச்சு பாட வைக்குறோம்” என்று சமர்த்துப் பெண்ணாக ‘பேட்ட ராப்’ நிகழ்ச்சிக்கு ப்ரொமோ செய்கிறார் மகேஸ்வரி.

“நானும் மகேஸ்வரியும் ஏற்கெனவே ஒரு ஷோ பண்ணியிருக்கோம். ஆனால், தொடர்ந்து நிகழ்ச்சியை வழங்குறது இதில்தான். ரெண்டு பேருக்கும் நல்லாவே சிங்க் ஆகுது. இது ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டுப் பேசுற ஷோ கிடையாது. அதனால, நாங்க என்ன பேசப்போறோம்னு ஒருத்தருக்கொருத்தர் டிஸ்கஸ் பண்ணிட்டுதான் போவோம்.

சில நேரம் ஆன் த ஸ்பாட்ல வர்றதைப் பேசினாலும் சரியா மேனேஜ் பண்ணிடுவோம்” என்கிற தீபக்கை இடைமறித்து, “ஆக்சுவலி, எனக்குதான் பயமா இருக்கும். தீபக் நல்லா வேகமா பேசுவாரு. அவரோட வேகத்தைப் புடிக்கிறதுக்கு ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.

ஆனாலும், தீபக் ரொம்ப ஹெல்ஃப் பண்ணுவாரு. ‘எதைச் சொல்ல வர்றீங்களோ, அதை நிறுத்தி நிதானமா சொல்லுங்க’ன்னு என்கரேஜ் பண்றதோட, எனக்குன்னு ஸ்பேசையும் கொடுத்தாரு. இப்போ, ஒரளவுக்கு செட்டாகிடுச்சு. இவரோட சேர்ந்து ஷோ நடத்தும்போது, கிடைக்கிற பெரிய பாசிட்டிவே இவரோட எனர்ஜி லெவல்தான்! காலைல 4 மணிக்கு ஆரம்பிக்கிற அந்த எனர்ஜி நைட்டு வரைக்கும் அப்படியே இருக்கும்” என்று நற்சான்றிதழ் தருகிறார் மகேஷ்வரி.

சரி, மகேஸ்வரியோட கோ ஆங்கரா கமல், தீபக் யார் பெஸ்ட்? 

 “இந்தக் கேள்வி உனக்குதாம்மா... நல்லவேளை, நான் தப்பிச்சிட்டேன்...”என்றபடியே மகேஸ்வரியை தீபக் கலாய்க்க, “ரெண்டு பேருமேதான். ஒவ்வொருத் தருக்கும் ஒரு ஸ்டைல். தீபக் ரொம்பவே புரொஃபஷனல் ஆங்கர். ஸ்பாட்ல மட்டுமல்ல, அதுக்கு முன்னாடியே முழுக்க முழுக்க ஷோவைப் பத்தி யோசிச்சிட்டு இருப்பாரு. கமல் அப்படியே வேற. ரொம்ப ஜாலியாத்தான் இருப்பான். எதுனாலும், ‘வாம்மா போய் பாத்துக்கலாம்’னு சொல்லிட்டுப் போயிடுவான். அதுவே, தீபக்கோட ஆங்கரிங் பண்ணும்போது நான் நிறைய கத்துப்பேன்” என்று சமாளித்தார் மகேஸ்வரி. 

எந்த நிகழ்ச்சியை எடுத்தாலும் பாட்டு, டான்ஸ்னே வருதே... போரடிக்காதா?

‘‘இங்க என்டர்டெயின்மென்டே பாட்டும் டான்ஸும்தான்! அதனால, நிச்சயமா போரடிக்காது. ஒரே மாதிரி இல்லாம கான்செப்ட்ல வித்தியாசமா கொடுத்தீங்கன்னா, ரசிகர்கள் பார்ப்பாங்க. எங்க ஷோவும் அப்படித்தான். நல்ல வரவேற்பு இருக்கு” என சீரியஸாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்த தீபக்கைக் குறுக்கிட்டு, “ஒரு தொகுப்பாளராதான் கரியரை ஸ்டார்ட் பண்ணினேன். அதுக்குப் பிறகு, ஒரு சில படங்கள், சீரியலில் நடிச்சேன்.

அப்புறம், மூணு வருஷ இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொகுப்பாளராவே வந்துட்டேன். நடிப்பிலும் விருப்பம் இருக்கு. வாய்ப்பு வந்தா நிச்சயம் நடிப்பேன்” என்று சினிமா ரீ - என்ட்ரிக்கு துண்டுபோட்டு வைத்தார் மகேஸ்வரி.

 “சரி... ரியாலிட்டி ஷோவுல டபுள் மீனிங்கல பேசுறதா சர்ச்சை இருக்கே...?” என்று கேட்டால், “எங்க ஷோவுல அப்படி எல்லாம் எப்பவுமே கிடையாது. அப்படி கன்டென்ட்டுல வந்தாகூட நாங்க அதை எடுத்துடுவோம். டிவியைப் பாக்குறவங்கன்னு பார்த்தீங்கன்னா, பெரும்பாலும் ஃபேமிலிதான். அதனால எங்களுக்கும் பெரிய பொறுப்பு இருக்கு” என்று இருவருமே கலவரமாகி கோரஸாக பதில் சொல்கிறர்கள். (ரிகர்சல் பார்த்திருப் பாங்களோ?)

``கலாய்ச்சுப் பேசிட்டா மட்டும் போதும்; ஆங்கரா ஆகிடலாம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஒரு தொகுப்பாளரோட வேலை அது மட்டும் கிடையாது. பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி, ஷோவை சரியா ஹேண்டில் பண்றது, டைமிங் காமெடி இதெல்லாம்தான் ஆங்கரிங்! இப்போ, டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் ரொம்பவே ஓப்பனா இருக்கு. அதனால, யாரா இருந்தாலும் கிடைக்கிற வாய்ப்பை சரியா அமைச்சுக்கோங்க.

ஒரே மாதிரி ரொம்பநாள் பண்ண முடியாது. நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி வித்தியாசம் காட்டுங்க” என்று புதுசா வர்ற தொகுப்பாளர்களுக்கு இலவச இணைப்பா அட்வைஸும் பண்ண ஆரம்பித்த தீபக்கிடம் பவ்யமாய் அபிநயம் பிடித்து நின்றார் மகேஸ்வரி.

ஜீ தமிழ் பேட்ட ராப் தீபக் மகேஸ்வரி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x