Published : 04 May 2019 02:41 PM
Last Updated : 04 May 2019 02:41 PM

ஒரு பேட்டி கிடைக்குமா? - மோடி, அக்‌ஷய் குமாரைக் கலாய்க்க ட்ரம்ப்பை வம்பிழுத்த சித்தார்த்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், பிரதமர் மோடியைப் பேட்டி எடுத்ததை சுட்டிக்காட்டி ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி எடுத்த நாள் முதல் இன்றுவரை மோடியைக் கிண்டல் செய்பவர்களின் எண்ணிக்கை, அதுவும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகர் சித்தார்த்.

அண்மைக்காலமாகவே நடிகர் சித்தார்த் அரசியல் ட்வீட்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரது ட்வீட்களில் பாஜக, காங்கிரஸ் என பேதம் காட்டாமல் கிண்டலடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்ரம்ப் அவர்களே... நீங்கள் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தநேரத்தில் நீங்கள் ஏன் என்னுடன் ஒரு நேர்காணலில் ஈடுபடக்கூடாது? உங்களிடம் கேட்க என்னிடம் மிக முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. அதாவது, நீங்கள் என்ன பழம் சாப்பிடுவீர்கள்? எப்போது தூங்கச் செல்வீர்கள்? உங்கள் வேலை முறை எத்தகையது? அப்புறம் உங்களுடைய அழகான அந்த தனித்துவம் பற்றிக் கேட்க கேள்விகள் தயாராக உள்ளன. ஒரு முக்கியக் குறிப்பு, என்னிடம் இந்திய பாஸ்போர்ட்டும் இருக்கிறது. தயவுசெய்து உங்கள் அனுமதிக் குறிப்பை அனுப்புங்களேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அக்‌ஷய் குமார் எடுத்த பேட்டி முழுக்க முழுக்க அரசியல் சார்பற்றது என்று பிரபலப்படுத்தப்பட்டது. அந்தப் பேட்டிக்குப் பின்னர் அக்‌ஷய் குமாரின் குடியுரிமையை சுட்டிக்காட்டி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x