Last Updated : 02 Apr, 2019 11:38 AM

 

Published : 02 Apr 2019 11:38 AM
Last Updated : 02 Apr 2019 11:38 AM

மகேந்திரன்... எம்ஜிஆர், சிவாஜிக்கு நெருக்கம்; ‘ஹீரோயிஸம்’ உடைத்த இயக்குநர்  

காலத்தால் மறக்க முடியாத சாகாவரம் பெற்ற கலைப்படைப்புகளைத் தந்த மகேந்திரன் எனும் மகா கலைஞன் மகேந்திரன் இன்று 2.4.19 காலமானார்.

காரைக்குடி கோட்டையூரை அடுத்த கண்டனூர்தான் இயக்குநர் மகேந்திரனின் சொந்த ஊர். கண்டனூர் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது அவரின் வீடு. அழகப்பா கல்லூரியில்தான் படித்தார்.

அப்படி மாணவராக இருந்த காலகட்டத்தில்தான் அவரின் கல்லூரிக்கு எம்ஜிஆர் வந்திருந்தார். அப்போது மூன்று மாணவர்களுக்கு மட்டும் பேச அனுமதி வழங்கப்பட்டது. அதில் மாணவர் மகேந்திரன் பேச்சில் வியந்துபோனார் எம்ஜிஆர். ‘குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் போது, ஒருவரால் எப்படிப் பாடமுடியும்? இந்த மாதிரியான அபத்தங்கள், தமிழ் சினிமாவில் மட்டும்தான் உண்டு’ என்று மகேந்திரன் சொல்ல... எம்ஜிஆர் அதைக் கேட்டு பிரமித்துப் போனார்.

பிறகு படிப்பெல்லாம் முடிந்ததும் எம்ஜிஆர், மகேந்திரனை அழைத்தார். ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்குவதற்கான திரைக்கதைப் பணிகளைக் கொடுத்தார். அதன் பிறகு நடிகரும் பத்திரிகை ஆசிரியருமான சோவிடம் பழக்கம் ஏற்பட்டது. ‘துக்ளக்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சினிமா விமர்சனங்களை வித்தியாசமான முறையில் எழுதி வந்தார்.

அப்பேர்ப்பட்ட நிலையில், எம்ஜிஆர் படமொன்றை மிகவும் கேலி செய்து விமர்சனம் எழுதினார். ஆனால் இதற்கும் கூட எம்ஜிஆர் அவர் மீது கோபம் கொள்ளவில்லை.

ஆனால் இந்த சினிமாவின் மீதும் சினிமாவுக்கென வகுத்து வைத்திருந்த இலக்கணங்கள் மீதும் ஓர் கோபம் கனன்று கொண்டே இருந்தது மகேந்திரனுக்குள்.

‘தங்கப்பதக்கம்’ நாடகம் மிகப்பெரிய வெற்றி அடைந்த போது, அதைப் படமாக்க முடிவு செய்தார் சிவாஜி. அப்போது சிவாஜிக்கும் மகேந்திரனுக்கும் அப்படியொரு அன்பும் பிணைப்பும் ஏற்பட்டது. குறிப்பாக, பக்கம்பக்கமாக வசனங்கள் பேசி, சிவாஜியின் நடிப்புக்குத் தீனி கொடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் சின்னச் சின்ன வசனங்கள் மூலம் சிவாஜியை இன்னும் சிறப்பான நடிப்பை வழங்கச் செய்திருப்பார். ‘அட...’ என்று இயக்குநர் பி.மாதவன் உட்பட எல்லோருமே பாராட்டினார்கள்.

எம்ஜிஆரால் அழைத்து வரப்பட்டாலும் சிவாஜியின் தங்கப்பதக்கம் மிகப்பெரிய உயரத்தை மகேந்திரனுக்கு கொடுத்தது. இதன் பின்னர், ரிஷிமூலம் முதலான படங்களுக்கும் ஆடுபுலி ஆட்டம், காளி முதலான படங்களுக்கும் கதை திரைக்கதை வசனம் என எழுதிவந்தார்.

இந்தப் பக்கம் எம்ஜிஆர், அந்தப் பக்கம் சிவாஜி என இருவருடனும் நெருக்கமாகவும் அணுக்கமாகவும் இருந்தாலும், ஹீரோ ஃபார்முலாக்களையெல்லாம் புறந்தள்ளி, யதார்த்த சினிமாவை, சினிமாவுக்குள் கொண்டுவந்த சாகாவரம் பெற்ற மகாகலைஞனாகத் திகழ்கிறார் இயக்குநர் மகேந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x