Published : 02 Apr 2019 17:00 pm

Updated : 02 Apr 2019 17:10 pm

 

Published : 02 Apr 2019 05:00 PM
Last Updated : 02 Apr 2019 05:10 PM

‘சூப்பர் டீலக்ஸ்’ கள்ள மவுனங்கள்: குமுறும் திருநங்கைகள்

‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பிம்ப சினிமா என்றும், அதன் கள்ள மவுனங்கள் குறித்தும் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர் திருநங்கைகள்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், அஸ்வந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ‘இந்த மாதிரி ஒரு படம் தமிழ் சினிமாவில் வெளிவருவது மிகப்பெரிய விஷயம்’ என ஒரு சாரார் கொண்டாடிக் கொண்டிருக்க, ‘ஒரே ஆபாசமாக இருக்கிறது’ என மற்றொரு சாரார் இந்தப் படத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பிம்ப சினிமா என்றும், அதன் கள்ள மவுனங்கள் குறித்தும் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர் திருநங்கைகள்.

இதுகுறித்து திருநங்கை பிரியா பாபு தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு இது:

‘சூப்பர் டீலக்ஸ்’ குறித்து நான் எழுதிய பதிவுக்கு நிறைய பல ஆதரவுகள், சில விமர்சனங்கள்.

எனது கேள்விகள் சில... 1.உங்கள் ரசிகன் கைதட்ட வேண்டும், இதுவரை விஜய் சேதுபதி ஏற்றிராத கதாபாத்திரம் என அவருக்குத் திருநங்கை வேடம் அளித்தீர்கள். இதுதான் இந்தப் படத்தின் வியாபாரத்துக்கான படைப்பு. ஆனால், திருநங்கையர் குறித்த எந்தவிதமான புரிதலும் இன்றி அவர் ஆணாக (மாணிக்கம்) இருக்கும்போது திருமணம் நடந்து, குழந்தை பிறந்து, பின் திருநங்கையாக மாறுவார் என யார் உங்களுக்குச் சொன்னது?

குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்கும் பாலியல் மாறுபாடுகள், வளரிளம் பருவத்தில் வெளிப்படுகையில், சமூகத்தின் அனைத்து கட்டுகளையும் உடைத்தெறிந்து, தான் உணர்ந்த பெண்மை உணர வேண்டி பெண் உரு கொண்டு, ஆண் அடையாளங்கள் துறந்து, ஆண்குறி அறுத்தெரிந்து பெண்ணாகிப் போகிறோம். ஆனால், நீங்கள் என்ன புரிதலோடு காட்சிப்படுத்தியுள்ளீர்கள்?

2. விஜய் சேதுபதி (ஷில்பா) தலை வழுக்கையாகக் காண்பித்து, அதில் விக் மாட்டுவதாகக் காட்சிப்படுத்துதலில் உள்ள வன்மம் ஏன்?

3. திருநங்கையர் இன்று பல்துறைகளில் தங்கள் இருப்பை இருத்தி வருகின்றனர். 20 ரூபாய் நோட்டை யாசகம் கேட்டு வாங்கி, அதைப் பெருமையாக, சாதனையாகக் காட்சிப்படுத்தியதை எப்படி எடுத்துக் கொள்வது?

4. ஒருமுறை வல்லுறவு செய்த காவல்துறை அதிகாரியை, ‘அவரு என் புருஷன்’ என ஷில்பா சொல்வது, தன்மீது ஏவப்படும் அத்தனையையும் துடைத்தெறிந்து, ரோஷம் அற்ற பிண்டங்களாக வாழ்பவர்கள் திருநங்கையர் என பொருத்தப் பார்க்கிறீர்களா?

இவை கேள்விகள் அல்ல, குமுறல்கள். இன்று விஜய் சேதுபதி நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் பலமான எதிர்ப்பு கிளம்பியிருக்கும். இங்கு பிம்ப சினிமா அரசியல், பலரை மவுனமாக்கிவிட்டது.

இவ்வாறு பிரியா பாபு தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

    சூப்பர் டீலக்ஸ்தியாகராஜன் குமாரராஜாதிருநங்கைகள்விஜய் சேதுபதிஷில்பாமாணிக்கம்தமிழ் சினிமா

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x