Last Updated : 14 Apr, 2019 06:48 PM

 

Published : 14 Apr 2019 06:48 PM
Last Updated : 14 Apr 2019 06:48 PM

தோனி விவகாரம்: மீம்ஸ் கிண்டல்கள் - பாவனா விளாசல்

தோனி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் நிகழ்ந்த மீம்ஸ் கிண்டல்களை கடுமையாக சாடியுள்ளார் பாவனா பாலகிருஷ்ணன்.

12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது. இப்போட்டியின் கடைசி ஓவரில் நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் வந்து ஏன் நோ-பாலை ரத்து செய்தீர்கள்? என்று நடுவர்களிடம் ]வாதிட்டார்.  இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனியின் செயல் குறித்து ஏற்கெனவே பல்வேறு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் பாவனா தனது ட்விட்டர் பதிவில், ''நடுவர் நோ பால் கொடுத்த பிறகு தோனி ஏன் களத்தில் புகுந்தார் என்பது பற்றி இதுவரை ஏன் கேள்வியே எழவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆட்டத்தை விளக்கும் விதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பாவனாவின் ட்விட்டர் பதிவு தோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாவனாவை சாடியும், மீம்கள் வழியாக கிண்டல் செய்தும் பல்வேறு பதிவுகளை வெளியிட்டனர். இது பாவனாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்ந்துகொண்டே இருந்ததால் தனது ட்விட்டரில் சிறு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

''சமூக ஊடகத்தில் என் நண்பர்கள் பலரும் பலவிதமாக என்னைப் பற்றி தவறாகப் பேசி தங்களுக்கு தாங்களே வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு அடி பின்னால் சென்று பார்க்கலாமா? நான் ஒரு கிரிக்கெட் தொகுப்பாளர். வழக்கமாக தோனியை தேவைக்கு அதிகமாகப் புகழ்வதால் நிறைய திட்டுகளை வாங்குபவள்.

வெளிப்படையாகவே தோனிதான் எனக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனால், இப்போது ஒரே ஒரு முறை, ஏன் வர்ணனையாளர்கள் தோனியின் ஆவேசம் பற்றி கேள்வியெழுப்பவில்லை என்று நான் கேட்டவுடன் உடனே தோனியைப் பிடிக்காதவள் ஆகிவிட்டேனா? இது நகைச்சுவையாக இல்லையா?  உங்கள் அனைவரையும் போல நானும் ஆட்டத்தைப் பற்றுடன் தொடர்கிறேன்.

ஆட்டத்துக்கான விதிமுறைகள் குறித்துப் புரிந்துகொள்ள நினைக்கிறேன். வழக்கம் போல மக்கள் ஊருக்கு இளைத்தவனை வைத்து மீம் உருவாக்கி, தவறாகப் பேசி, பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

கர்மா உங்களை விடாது. ஒருநாள், நீங்களோ, உங்களுக்கு நெருங்கிய ஒருவரோ இந்த நிலைமைக்கு ஆளாகக் கூடும். நான் சொல்வதைப் புரிந்து கொண்ட மற்றவர்களுக்கு, நன்றி. அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்.  மீம்ஸ்களை, ஜோக்குகளை, தவறான வார்த்தைகளைப் பகிர்ந்தவர்களின் அதே எண்ணிக்கை எனது இந்த கருத்தைப் பகிர்வதிலும் வருகிறதா என்று பார்ப்போம். எப்போதும் போல, எனது நல விரும்பிகளுக்கு நன்றி.

நல்ல எண்ணங்களும், செயல்களும் தொடரட்டும். தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்''.

இவ்வாறு பாவனா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x