Last Updated : 12 Mar, 2019 09:21 PM

 

Published : 12 Mar 2019 09:21 PM
Last Updated : 12 Mar 2019 09:21 PM

பொள்ளாச்சி சம்பவம்: காவல்துறைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள்

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது. 

இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து ,அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம்  வேண்டுகோள் வைக்கிறோம்.

இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படும் என நம்புகிறோம்,அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.

அலைபேசியில் உள்ள இணையதளங்கள் முகநூல் வாட்ஸ்அப் போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நம்மை வழி நடத்துவதில் நம்ம பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும்,  கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை ..!அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x