Published : 08 Mar 2019 05:06 PM
Last Updated : 08 Mar 2019 05:06 PM

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே! பாட்டு; - விழுந்து விழுந்து சிரித்தார் எம்ஜிஆர் - பாக்யராஜ் மனம் திறந்த பேட்டி

'மன்னாதி மன்னனையெல்லாம் பாத்தவன் நான். அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்' என்ற ‘என் சோகக் கதையக் கேளு தாய்க்குலமே’ பாட்டு வரிகளையும் காட்சியையும் பாத்து, எம்ஜிஆர் விழுந்து விழுந்து சிரித்தார் என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

நடிகர் நம்பியார் கிட்டத்தட்ட 1950களுக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர். எண்ணற்ற படங்களில் விதம் விதமாக நடித்த நம்பியார், ஒருகட்டத்தில் எம்ஜிஆருக்கு இணையான வில்லன் என்று பெயர் வாங்கினார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று அன்றைய முன்னணி நடிகர்களுடனும் கமல், ரஜினி முதலானவர்களுடனும் வில்லனாக நடித்தார்.

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்ததும் சிவாஜிக்குப் படங்கள் குறைந்ததும் ஒரேகாலகட்டத்தில் நிகழ்ந்தது. அந்த சமயத்தில், நம்பியாருக்கு படங்கள் குறைந்தன. அப்போது, நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், தன்னுடைய ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் கதை விவாதத்தில் இருந்தபோது, படத்தின் குஸ்தி வாத்தியார் கதாபாத்திரத்துக்கு நம்பியார்தான் பொருத்தமானவர் என உணர்ந்தார்.

அதன்படி, அவரே ஒப்பந்தம் செய்யப்பட, குணச்சித்திரமும் காமெடியும் கலந்த அந்தக் கேரக்டரில் வெளுத்து வாங்கினார் நம்பியார்.

படத்தில், எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இளையராஜா இசையமைத்திருந்தார். முக்கியமாக, ‘என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே’ என்ற பாடல், பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

பொதுவாகவே தன்னுடைய படங்களை, எம்ஜிஆருக்குப் போட்டுக்காட்டுவது பாக்யராஜின் வழக்கம். அதன்படி, ‘தூறல் நின்னு போச்சு’ படத்தையும் அவருக்குத் திரையிட்டார்.

நம்பியாருக்கு நேற்று (மார்ச் 7-ம் தேதி) 100-வது பிறந்தநாள். இது அவரின் நூற்றாண்டு. இந்த நிலையில், எம்.என்.நம்பியார் குறித்தும் எம்ஜிஆர் படம் பார்த்தது தொடர்பாகவும் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘எம்ஜிஆர் படம் பார்த்ததைச் சொல்றதுக்கு முன்னால, இன்னொரு விஷயத்தைச் சொல்லியாகணும். ‘என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே’  பாட்டுக்கு முன்னால, தொகையறா மாதிரி ஒண்ணு வரும். அது எம்.என்.நம்பியார்  பாடணும், அதுக்கு அடுத்தாப்ல நான் பாட ஆரம்பிக்கணும். இதான் அந்தப் பாட்டுக்கான சிச்சுவேஷன்.

நம்பியார் சார் பாடுற தொகையறால,

 ‘மன்னாதி மன்னனையெல்லாம் பாத்தவன் நான்.

அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்.

அப்பேர்பட்ட என்னை பஞ்சாயத்துல

நிறுத்திட்டானுங்களே படுபாவிப் பசங்க.

என் அருமையென்ன, பெருமையென்ன...’ன்னு பாடுவாரு.

உடனே நண்பர்கள் சில பேரு, ‘என்னங்க இது. மன்னாதி மன்னனைப் பாத்தவன், மதுரை வீரனை எதிர்த்தவன்னெல்லாம் இருக்கு. எம்ஜிஆர் கோவிச்சுக்கப் போறாரு’ன்னு சொன்னாங்க. ‘அப்படிலாம் கோவிச்சுக்கமாட்டாருய்யா. இது நம்பியார் சாரைப் பெருமையா சொல்ற விஷயம். தவிர, எம்ஜிஆருக்கும் அவருக்குமான தொடர்பைச் சொல்ற மாதிரி இருக்குதுன்னுதான் மக்கள் பாப்பாங்க; ரசிப்பாங்க. அதனால இருக்கட்டும்’னு உறுதியா சொல்லிட்டேன். அதன்படியே பாட்டு பண்ணியாச்சு.

இப்ப... எம்ஜிஆர் படம் பாக்க வந்தாரு. டைட்டில் ஆரம்பமாச்சு. நம்பியார் சீன் அறிமுகம். அப்படியே படம் போகப் போக ரசிச்சு ரசிச்சு சிரிச்சுக்கிட்டே இருந்தார். பக்கத்துல நானும் உக்கார்ந்திருந்தேன்.

அப்புறம்... ‘என் சோகக் கதையைக் கேளு பாட்டு’ சீன் வந்துச்சு. முக்கியமா, ‘மன்னாதி மன்னனையெல்லாம் பார்த்தவன் நான். அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்’ன்னு நம்பியார் சார் பாடும்போது, எம்ஜிஆர், விழுந்து விழுந்து சிரிச்சாரு. நம்பியார் சார் நடிப்பைப் பாத்துட்டு, அடக்க முடியாம, வாய்ல கர்ச்சீப்பை ஒருகையால வைச்சு அழுத்திக்கிட்டாரு. இன்னொரு கையை என் தொடைல பொளேர் சுளீர்னு அடிச்சிக்கிட்டே இருந்தாரு.

படம்லாம் முடிஞ்சு வெளியே வந்ததும், ‘நல்லாயிருக்கு படம். நம்பியாரை டோட்டலா மாத்திட்டியே. ரொம்பப் பிரமாதம் ரொம்பப் பிரமாதம்’னு கட்டிப்பிடிச்சு பாராட்டினார்.

அந்த சமயத்துல நம்பியார் சார், வெளிநாட்ல இருந்தார். போன் பண்ணி அவர்கிட்ட சொன்னேன். நம்பியார் சாருக்கு அவ்ளோ சந்தோஷம். மன நிறைவு. தவிர, படம் ரிலீஸாகி, எப்படிப் போயிட்டிருக்குன்னு தினமும் வெளிநாட்லேருந்து கேட்டுக்கிட்டே இருந்தாரு. அவருக்கும் நிறைய பேர் போன்ல பாராட்டினதையெல்லாம் பகிர்ந்துகிட்டார்''.

இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x