Published : 19 Mar 2019 01:51 PM
Last Updated : 19 Mar 2019 01:51 PM

மகன் பெயரில் சர்ச்சை ட்வீட்: டி.ராஜேந்தர் விளக்கம்

தனது மகன் குறளரசன் பெயரில் ட்விட்டரில் வெளியான சர்ச்சை கருத்துகளுக்கு இயக்குநர் டி. ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்து கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதை அஜித் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் டி.ராஜேந்தரின் மகனான குறளரசன் பெயரில், ''என் தந்தைதான் அடுத்த முதல்வர்'' என்று ரீ-ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் இயக்குநரும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனருமான டி.ராஜேந்தர் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''என் மகன் குறளரசனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அதில் என் மகனுக்கு சம்பந்தமேயில்லாத அரசியல் பற்றி தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதையும் சிலர் முகநூலிலும் ட்விட்டரிலும் பரப்பி வருகிறார்கள்.

அந்த போலி கணக்கு வைத்திருப்பவர்கள் யாரென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைமில் புகார் அளிக்க உள்ளேன். எனக்கோ என் மகன் குறளரசனுக்கோ எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு இல்லை'' என்று டி.ராஜேந்தர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x