Published : 14 Mar 2019 02:59 PM
Last Updated : 14 Mar 2019 02:59 PM

என் அடுத்த படத்துக்கு 10 வருடங்கள் கூட ஆகலாம்: தியாகராஜன் குமாரராஜா

‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இம்மாதம் (மார்ச்) 29-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்காக தியாகராஜன் குமாரராஜா, ரம்யா கிருஷ்ணன் இருவரும் வீடியோ பேட்டி அளித்தனர். அதில், ரம்யா கிருஷ்ணன் கேள்விகளுக்கு தியாகராஜன் குமாரராஜா பதில் அளித்தார். அதன் தொகுப்பு இது...

ரம்யா கிருஷ்ணன்: என்னுடைய கதாபாத்திரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத விஷயம் என்ன?

தியாகராஜன் குமாரராஜா: நம்பகத்தன்மை. படத்தின் ஆரம்பத்தில் மட்டுமல்ல. லீலா என்ற முழு கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை.

ரம்யா கிருஷ்ணன்: ஏன் இந்தப் படத்துக்கு என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

தியாகராஜன் குமாரராஜா: இப்படி கேட்டுட்டீங்களே... அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு உள் வலிமை இருக்கவேண்டும். அது உங்களிடம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. இத்தனை வருடங்கள் இந்த சினிமாவில் தாக்குப்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நீங்கள் நாயகியாக அறிமுகமான ‘வெள்ளை மனசு’ படத்திலிருந்து பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருப்பீர்கள்.

ரம்யா கிருஷ்ணன்: விஜய் சேதுபதியுடனான உங்களுடைய தருணங்கள் பற்றி?

தியாகராஜன் குமாரராஜா: இரண்டு தருணங்கள் இருக்கின்றன. போலீஸ் ஸ்டேஷன் காட்சி ஒன்று உள்ளது. அதைப்பற்றி இப்போதைக்கு நான் விரிவாகச் சொல்ல முடியாது. ஆனால், நானே எதிர்பாராத ஒரு விஷயத்தை அவர் செய்தார். அது எனக்கு மிகவும் பிடித்தது. இன்னொன்று, படத்தின் இறுதிக்காட்சி. விஜய் சேதுபதி ஒரு நுழைவாயிலில் இருப்பார். ஒரு இடத்திலுள்ள கேமராவை நோக்கி அவர் வரவேண்டும். அப்போது நான் ஒரு இடம் சொல்லியிருந்தேன்.  “வேண்டுமென்றால் நான் இருட்டில் நின்றுவிட்டு வரட்டுமா?” என்று கேட்டார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் கூறியதை நான் எதிர்பார்க்கவில்லை. “ரொம்ப சமத்தா சொல்லிட்டீங்க. அப்டியே பண்ணுங்க”என்று கூறினேன். அவர் நல்ல நடிகர் என எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான நம்பகத்தன்மையை சேர்ப்பது எல்லோராலும் முடியாது.

ரம்யா கிருஷ்ணன்: சமீபத்தில் உங்களைக் கவர்ந்த படம் எது?

தியாகராஜன் குமாரராஜா: பரியேறும் பெருமாள்.

ரம்யா கிருஷ்ணன்: உங்களுடைய அடுத்த படத்துக்காகவும் நாங்கள் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?

தியாகராஜன் குமாரராஜா: கண்டிப்பாக இல்லை. 10 வருடங்கள் கூட ஆகலாம், தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x