Last Updated : 21 Mar, 2019 03:00 PM

 

Published : 21 Mar 2019 03:00 PM
Last Updated : 21 Mar 2019 03:00 PM

இது நம்மஆளு’ ஷோபனாவுக்கு வாழ்த்துகள்!

‘அட... இவ்வளவு படத்திலா நடித்திருக்கிறார்’ என்று சிலரை ஆச்சரியமாகச் சொல்லுவோம். ‘அப்படி அதிகம் நடிச்சதே தெரியலியே...’ என்று வியந்துபோவோம். ‘ஆனாலும் பிரமாதமான நடிகைப்பா’ என்று எல்லோரும் சொல்லுவோம். பாராட்டுவோம். அப்படிப்பட்ட நடிகையரில் முக்கியமானவர், ஷோபனா.

கேரளாதான் பூர்வீகம். லலிதா, பத்மினி, ராகினியின் உறவினர், நடிகை சுகுமாரியின் உறவினர், நடிகர் வினீத் கூட இவருக்குச் சொந்தமே என்றெல்லாம் இவர் அறிமுகமாகி, நம் மனதில் இடம்பிடித்த பிறகு சொல்லிய விஷயங்கள்.

84-ம் ஆண்டு, மலையாளப் படம் ஒன்றில் அறிமுகமானார் ஷோபனா. அடுத்து இங்கே கமலுடன் ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ஜோடி சேர்ந்தார். ‘சிவா’ படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டவர், ‘தளபதி’ படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தார்.

ஆனாலும், கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பானு கேரக்டர்தான், இவரைத் தமிழகமே கொண்டாடக் காரணமாக இருந்தது. மடிசார் புடவையும் மூக்குக்கண்ணாடியுமாக வெளுத்து வாங்கியிருப்பார் ஷோபனா. அந்த சமயத்தில்தான், ‘யாருப்பா இது... யாருப்பா இது...’ என்று எல்லோரும் கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.

நடிக்க மட்டும் செய்யவில்லை ஷோபனா. அவர் மிகச்சிறந்த பரத நாட்டியக் கலைஞர். பரதம் என்பது அவர்கள் குடும்பத்தின் வரம். பரதத்தில், புதுப்புது உத்திகளைக் கையாண்டார். குறிப்பாக, பரதத்திலேயே கதை சொல்லும் உத்தியால், எல்லோராலும் கவரப்பட்டார்.

அதனிடையே மலையாளத்தில் இவர் நடித்த, ‘மணிச்சித்திரத்தாழ்’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக, இவரின் நடிப்பைக் கண்டு எல்லோரும் பிரமித்துப் போனார்கள். விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. தேசிய விருதே கிடைத்தது. இந்தப் படம்தான், கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் படமானது. அதுவே தமிழில் ‘சந்திரமுகி’யாயிற்று. ஷோபனாவின் கேரக்டரில் செளந்தர்யாவும் ஜோதிகாவும் நடித்தனர். ஆனால், மூன்று படங்களையும் பார்த்தவர்கள், ஷோபனாவின் நடிப்பில் உள்ள தனித்துவத்தைப் புகழ்வது நிச்சயம். வெகு இயல்பான நடிப்புதான் ஷோபனாவின் பிளஸ் பாயிண்ட்.

அதேபோலத்தான், ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தை முதலில் தெலுங்கில்தான் எடுத்தார் இயக்குநர் கே.பாலசந்தர். படத்தின் பெயர் ‘ருத்ரவீணா’. சிரஞ்சீவியும் ஷோபனாவும் நடித்தனர். தமிழில் ஷோபனாவின் கேரக்டரை, சீதா செய்திருந்தார். சிரஞ்சீவிக்குப் பதிலாக கமல் நடித்தார்.

ஷோபனா, திரைப்படங்களில் நடிப்பதை தற்போது குறைத்துக் கொண்டார். முழுக்க முழுக்க தன்னுடைய நடனப்பள்ளியிலேயே செலவழிக்கிறார். நடனமே மூச்செனவும் பேச்செனவும் வாழ்வெனவும் இயங்கிக் கொண்டிருக்கும் ஷோபனாவுக்கு இன்று 21.3.19 பிறந்தநாள்.

‘தளபதி’யின் ‘யமுனை ஆற்றிலே...’ பாடலையும், ஷோபனாவின் நடிப்பையும், அவரின் கண்களையும் மறக்கவே முடியாது. ‘96’ படத்தில் ‘யமுனை ஆற்றிலே’ பாடல் ஒரு கதாபாத்திரமாகவே வந்தபோது, நம் நினைவில் சட்டென்று மலர்ந்து சிரித்தது ஷோபனாதானே!

இந்தப் பிறந்தநாளில், ஷோபனாவை மனதார வாழ்த்துவோம்!

‘இது நம்ம ஆளு’ ஷோபனா... ஹேப்பி பர்த் டே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x