Published : 04 Feb 2019 12:32 PM
Last Updated : 04 Feb 2019 12:32 PM

நான் சினிமாவில் தொடரக் காரணம் ‘ஆரண்ய காண்டம்’: ஃபஹத் ஃபாசில்

தான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்தது ‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் பார்த்த பிறகுதான் என நடிகர் ஃபஹத் ஃபாசில் கூறியுள்ளார்.

2011-ம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் ‘ஆரண்ய காண்டம்’. அறிமுக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெரஃப், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்தனர். வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லையென்றாலும், இன்றளவும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. படத்தொகுப்பு மற்றும் இயக்குநரின் சிறந்த முதல் படம் ஆகிய பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.

தியாகராஜன் குமாரராஜா, தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் போலவே இந்தப் படமும் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை ஒரு புள்ளியில் இணைவதைப் பற்றிய படமாக இருக்கும் என்று தெரிகிறது.

இதில், மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்துள்ள ஃபஹத் ஃபாசில், “(முதல் பட தோல்விக்குப் பிறகு) நான் என்ன மாதிரியான படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் எனக்குக் குழப்பம் இருந்தது. அப்போதுதான் நான் ‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் பார்த்தேன். பிரமித்துவிட்டேன். அவ்வளவு ஸ்டைலான படம் அது. அந்தப் படம்தான் நான் சினிமாவில் தொடர உந்துதலாக இருந்தது. நான் ஒரு நடிகனாக என்னை உருவாக்கிக்கொள்ள முக்கியப் படமாக இருந்தது.

தியாகராஜன் குமாரராஜாவுடன் பணியாற்றுவது அதி அற்புதமான அனுபவம். என்னைச் செதுக்கிக்கொள்ள சிறந்த வழியாக இருக்கிறது. நான் நடிப்பில் அடுத்த தளத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் இது என இந்தப் படம் என்னை யோசிக்க வைத்துவிட்டது. நான் இதுவரை செய்தவற்றில் இருந்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

ஃபஹத் ஃபாசில், சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தில் வில்லனாக நடித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x