Published : 06 Jan 2019 11:34 AM
Last Updated : 06 Jan 2019 11:34 AM

சர்ச்சைகளால் கற்றுக் கொள்கிறேன்- மனம் திறக்கும் `சின்மயி

சின்மயி... 2018-ம் ஆண்டின் டாக் ஆஃப் தமிழ்நாடு. ஒரு பக்கம் `மீ டூ` சர்ச்சை,  மறுபக்கம் 96 பாடல்களின் வெற்றி என வாழ்க்கை எதைத் தந்தாலும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் இவர், ஓர் இசை நிகழ்ச்சிக்காக கோவை வந்திருந்தார். பரபர கேள்விகளுக்கு, பதட்டமின்றி பதில் அளித்தார் சின்மயி.

மொழிச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் இயக்குநர், பாடகி, பின்னணி குரல் கலைஞர், சமூக சேவகர், விலங்குகள் நல ஆர்வலர், பெண்ணியப் போராளி என சின்மயிக்குப் பன்முகங்கள். இதற்கான ஆற்றலின் ஊற்று எது?

2011-ல் அமெரிக்க அரசு ஒத்துழைப்பில், ஹிலாரி கிளிண்டன் ஆரம்பித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குத் தேர்வானேன்.

உலகின் முதன்மையான 500 நிறுவனங்களின் பெண் நிர்வாகிகள், வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பெண்களுக்கு நேரடியாகப் பயிற்சியளித்து,  வழிகாட்டும் நிகழ்ச்சி அது. என் வாழ்வை மாற்றிய பயிற்சி அங்கு கிடைத்து. `எனக்கு கிடைத்ததெல்லாம் இந்த சமூகத்திலிருந்து கிடைத்ததுதான், முடிந்த மட்டும் சமூகத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்`  என்கிற உத்வேகத்தை நான் அங்கிருந்து பெற்றுக்கொண்டேன்.

`ரியாலிட்டி ஷோ`க்களின் விளைவாக, குழந்தைகளுக்கு வாய்ப்பாட்டு, இசைக்கருவிகளை இசைத்தல், நடனம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனும் ஆர்வம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கலைகளின் மீதான தமிழ்க் குடும்பங்களின் திடீர் ஆர்வத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எந்த சமூகமும், தன் பாரம்பரியக் கலைகளின் மீது ஆர்வம் செலுத்துவது உன்னதமானது. கலைதான் மனிதர்களை மேம்படுத்துகிறது. பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் பாரம்பரியக் கலைகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், அதே சமயத்தில் கலைகளைக் கற்றுக்கொள்வது `ரியாலிட்டி ஷோ` போன்ற போட்டிகளுக்காகத்தான் எனும் குறுகிய நோக்கம் இருக்கவேண்டியதில்லை. முறையான பயிற்சி இல்லாமல் இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்வதால் கலைக்கும், அதைக் கற்றுக்கொள்பவர்களுக்கும் எவ்விதப் பலனுமில்லை. சிறு குழந்தைகள் ரியாலிட்டி ஷோக்களில் நள்ளிரவு வரை நீளும் படப் பிடிப்புகளில் துவண்டு, தூங்கி விழுவதைப் பார்த்திருக்கிறேன். 'நான்கு வயதில் இந்த பெண் குழந்தை இத்தனை சிரமப்பட்டு தொலைக்காட்சியில் பாடி, ஆடி சாதிக்க வேண்டியது என்ன?' எனும் கேள்வி மனதில் தோன்றும். எந்தக் கலையையும் முறையாகப் பயின்று, வித்தையில் தேர்ச்சி பெற்ற பின் அரங்கேறினால் கலை வளரும். சமூகம் மேம்படும்.

சங்கீதம் பயிலும் இளம் தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நிறைய தூய சங்கீதம் கேளுங்கள். எப்போதும் உங்களைச் சுற்றி இசை தவழட்டும். உலகின் எல்லா இசைவடிவங்களையும் கேளுங்கள். பாட்டுதான் என்றில்லை, இசைக் கருவிகளின் இசையையும் தவறாமல் கேளுங்கள். இளமையிலேயே உங்களுக்குள் இசை ஊறட்டும். மாபெரும் பாடகர்கள் எல்லாம்,  அசுர சாதகிகளும் கூட. சினிமா பாடல்களையே மீண்டும் மீண்டும் பாடிக்கொள்வது சுய அடையாளத்தை இழக்கச் செய்துவிடும். பயிற்சிதான் அடிப்படை. அதன் வழியாகத்தான் தனி ஆளுமை உருவாகி வரும். சங்கீதம் பயிலும் பிள்ளைகளுக்காக சீரியல், சினிமா போன்ற விஷயங்களை  பெற்றோர்கள்  தியாகம் செய்யலாம்.

பாடகர்கள் நெடுங்காலம் திரைத்துறையில் நீடித்திருந்த காலம் மாறி, இப்போது, படத்துக்குப் படம் புதிய பாடகர்கள் அறிமுகமாகின்றனர். சமூக வலைதளங்கள், செயலிகள் வழியாக புதிய பாடகர்களின் அலையும் உருவாகியுள்ளது. ஆனாலும்,  சின்மயி இன்றும் கொண்டாடப்படுகிறார். உங்களை நீடித்திருக்கச் செய்வது எது?

இளமையில் முறையாக சங்கீதத்தை கற்றுக்கொண்டதுதான். ஜேசுதாஸ், எஸ்.பி.பி.,  ஜானகி போன்ற மேதைகள் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருப்பதற்கும், அவர்களது முறையான சங்கீதப் பயிற்சிக்கும் நேரடி தொடர்புண்டு. என்னுடைய குரு என் அம்மாதான். தனிப்பட்ட முறையில் பயிற்சி தரவில்லையென்றாலும், வீட்டில் காலை முதல் மாலை வரை பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். முழுக்க சங்கீத சூழலியே வளர்ந்தது, எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. 

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் சங்கங்கள் முதல் டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கம் வரை ஏராளமான பிரச்சினைகள். தமிழ் சினிமாவின் தொழில் ரகசியங்கள், செயல்பாடுகள் பொது வெளியில் விவாதத்திற்குள்ளாகின்றன.

மக்கள் பிரச்சினைகளை மறக்கடிக்கவா இந்த சர்ச்சைகள்?

சர்ச்சைகள் நல்லதுதான். இதனால் சினிமா வணிகம் வெளிப்படையாகவும், விசாலமாகவும் மாறும் என நம்புகிறேன். வேறு பிரச்சினைகளைவிட,  இவற்றின் மீது கவனம் விழுவது நட்சத்திர அந்தஸ்து காரணமாகத்தான். விரைவில் நன்மை நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பொதுவாக, பெண் தன் மீதான ஒடுக்குமுறை அல்லது அத்துமீறலுக்கு எதிராகப் போராடும்போது, சமூகத்தை எதிர்கொள்வதைவிட,  குடும்பத்தாரின் ஆதரவை இழக்க நேர்ந்து விடுகிறது. உங்கள் அனுபவம் எப்படி?

என் கணவர் ராகுல், பெண்ணியம் குறித்த சரியான புரிதல் உள்ளவர். என் பக்கபலமே அவர்தான். நீதிக்காக நான் போராட, என் மொத்த குடும்பமும் எனக்கு பக்கபலமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை விடுத்து,  குற்றம் சாட்டியவரை வதைக்கும் போக்குதான்  சமூகத்தில் உள்ளது. `மீ டூ` யாரோ ஒரு பாடகியின், கவிஞியின், பெண் பத்திரிகையாளரின், மாணவியின் பிரச்சினை என்று கடந்து செல்வது, கேலி செய்வது, எதிர்ப்பது தவறானது. ஒவ்வொரு பெண்ணின் சுய கெளரவத்துக்கும் சேர்த்துதான் போராடுகிறோம். பணிச்சூழலை விட,  குடும்பச் சூழலில்தான் பாலியல் தொந்தரவுகள் அதிகமுள்ளன என்பது `மீ டூ` இயக்கத்தின் வழியாக வெளிவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. பலருக்கு அதை வெளியே சொல்லக்கூட வாய்ப்பில்லை. அவர்களுக்கும் சேர்த்துத்தான் `மீ டூ`.

தமிழ் ட்வீட்டர்களுடனான மோதல், சுசி லீக்ஸ், மீ டூ, டப்பிங் யூனியன் என அடுத்தடுத்த சர்ச்சைகள், சின்மயியை களைப்படையச் செய்திருக்கிறதா?

ஹா.. ஹா.. இன்றும் நூற்றுக்கணக்கான ஆபாச வசைகள், சமூக வலைதளங்களில் நேரடியாக என் மீது பொழியப்படுகிறது. கேட்கக் கூசும் வசைகள். உடலும் உள்ளமும் நடுநடுங்கச் செய்யும் துர்வார்த்தைகள். கொலை செய்வேன்,  கற்பழிப்பேன் என நேரடி மிரட்டல்கள். தினமும் இதைக் கடந்துதான் என் தினங்கள் நகர்கின்றன. பிரபலமான எனக்கே இப்படி நடக்கையில், குரலற்ற பெண்களின் நிலை என்ன என யோசித்துப் பார்ப்பேன். அஞ்சி ஓடாமல், இதை எதிர்த்து நிற்பதே நான் ஆற்றவேண்டிய கடமை. இந்த சர்ச்சைகளால் எனக்கு இழப்புகளும் உண்டு.

ஆனால், ஒரு சமூக அவலத்தைப் பார்க்கையில், எதிர்வினை ஆற்றுவது என் இயல்பு. பல விஷயங்களை  சர்ச்சைகளின் வழியாகத்தான் கற்றுக்கொண்டிருக்கிறேன். எதையும் செய்யாமல் சும்மா இருப்பதனால் உருவாகும் நஷ்டத்தைவிட, எதையாவது செய்வதால் விளையும் நஷ்டம் குறைவானது. பெண்களை ஒடுக்காத, சுரண்டாத ஒரு சமூகம் உருவாக, சில சொந்த இழப்புகளைத் தாங்கிக் கொள்ளலாம். வருவது வரட்டும்; ஒருகை பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x