Published : 08 Jan 2019 01:04 PM
Last Updated : 08 Jan 2019 01:04 PM

ரசிகர்கள் விசிலடிக்க படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன: ‘விஸ்வாசம்’ ஒளிப்பதிவாளர் வெற்றி

ரசிகர்கள் விசிலடித்துக் கொண்டாட படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன என்று ‘விஸ்வாசம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் வருகிற 10-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். விவேக், தம்பி ராமையா, ஜெகபதி பாபு, ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாவைப் போலவே வெற்றிக்கும் அஜித்துடன் தொடர்ந்து நான்காவது படம் இது. “ரசிகர்கள் கொண்டாட, விசிலடிக்க படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன. அஜித் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து 10 -12 வருடங்கள் ஆகியிருக்கலாம்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என எங்களின் முந்தைய படங்களில் அஜித்தின் கதாபாத்திரம் தீவிரத்தன்மையுடன் இருக்கும். ஆனால், ‘விஸ்வாசம்’ படம் அஜித்துக்குள் இருக்கும் என்டெர்டெயினரை முழுமையாக வெளிக்கொண்டு வரும்.

அத்துடன், எமோஷனல் காட்சிகளிலும் தூள் கிளப்பியிருக்கிறார். அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சாதாரண பொதுமக்களுக்கும் அஜித்தின் கதாபாத்திரம் பிடிக்கும். ‘தூக்கு துரை’யுடன் ரசிகர்கள் எமோஷனலாக ஒன்றிவிடுவார்கள்.

கிராமப்புறம், நகர்ப்புறம் என இரண்டு விதங்களிலும் படத்தின் கதை அமைந்துள்ளது. எனவே, இரண்டு கலர் டோன் பயன்படுத்தினோம். சண்டைக் காட்சிகளைப் பொறுத்தவரை மழைக்காட்சி தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது” என படம் பற்றிப் பகிர்ந்து கொண்டார் வெற்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x